June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

வாழ்நாள் முழுக்க மக்களுடன் இருப்பேன்-மாநாட்டில் விஜய் பேச்சு

1 min read

I will be with the people throughout my life – Vijay’s speech at the conference

21.8.2025
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் இன்று நடைபெற்றது. மாநாட்டில் தவெக தலைவர் விஜய் 35 நிமிடங்கள் உரையாற்றியுள்ளார். மாலை 4.50 மணிக்கு உரையை தொடங்கிய விஜய், 5.25 மணி வரை பேசிய நிலையில் தற்போது நிறைவு செய்துள்ளார்.
மாநாட்டில் விஜய் பேசியதாவது:-

பாசிச பாஜகவுடன் மறைமுக கூட்டுக்கு செல்ல நாம் என்ன ஊழல் கட்சியா? மோடியின் முரட்டுப் பிடிவாதத்தால் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. பொய் வாக்குறுதிகள் கொடுத்து திமுக எல்லோரையும் ஏமாற்றுகிறது.
234 தொகுதிகளிலும் உங்கள் வீடுகளில் உள்ளவர்கள்தான் வேட்பாளர்களாக நிற்பார்கள். தமிழ்நாடு முழுக்க நானே வேட்பாளர் என நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும். உங்கள் விஜய்தான் இந்த கட்சியின் சின்னம். தமிழ் மக்கள் யாவரும் என் ரத்த உறவுகள். அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலனுடன் வந்துள்ளேன்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குழந்தைகளின் தாய்மாமன் நான். தமிழக மக்கள் எனக்கு கடவுள் கொடுத்த வரம். மக்களை மதிக்கிறேன். மக்களை வழிபடுகிறேன். உங்களுக்காக உண்மையாக உழைக்க உங்கள் விஜய் வந்திருக்கிறேன்.
வாழ்நாள் முழுக்க மக்களுடன் இருப்பேன். நல்லது செய்ய மட்டுமே வந்திருக்கிறேன். மக்களுக்கு பணி செய்து கிடப்பதே என் கடன்.
இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் ஆவேசமாக விஜய் பேசினார். விஜய் பேசும் போது வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதாக கூறினார். இதனால், தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளர் விஜய் என்று அறிவித்துவிட்டு சில நொடிகள் இடைவெளி விட்டார். இதைக்கேட்ட தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.

ஆனால், அடுத்த நொடியே, அனைத்து தொகுதிகளிலும் நானே வேட்பாளராக நிற்பதாக கருதுங்கள். 234 தொகுதிகளிலும் விஜய்தான் உங்கள் சின்னம்.” என்று கூறினார். வேட்பாளர் பட்டியல் என்று கூறிவிட்டு தனது பெயரை விஜய் கூறியதும் உண்மையாகவே, போட்டியிடும் தொகுதியை விஜய் அறிவித்துவிட்டதாக நினைத்த தொண்டர்களுக்கு, சிறிது நேரம் கழித்துதான் விஜய் பேச்சின் சாராம்சம் புரிந்தது.

மாநாட்டில் விஜய் மேலும் கூறுகையில், நான் ஒன்றும் அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலத்தோடு அரசியலுக்கு வந்து இருக்கிறேன். எல்லாவற்றிற்கும் தயாராகவே வந்துள்ளேன்” என்றார்.

மாநாடு பிற்பகல் 3.30 மணியளவில் தொடங்கிய நிலையில், 6 மணிக்கு முன்பாகவே முடித்துக்கொள்ளப்பட்டது. மாநாட்டில் விஜய் ராம்ப் வாக் முடிந்ததும் தொண்டர்கள் வெளியேறத் தொடங்கினர். விஜய் உரையாற்றிய பிறகு மாநாடும் முடிந்தது. இதையடுத்து ஒரே நேரத்தில் தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறினர். இதனால், மாநாடு நடைபெற்ற பாரப்பத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எலியார்பத்தி சாலையில் வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து சென்றன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *