புளியரைப் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம்-சமூக ஆர்வலர் கோரிக்கை
1 min read
Wild elephants rampage in Puliyarai area -Community activist’s request
31/8/2025
தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து மரங்களை சாய்த்தும், நெல் பயிர்களை அழித்தும் வருகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் புளியரை தங்கராஜ் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பியுள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா புளியரை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் காட்டுயானைகள், சிறுத்தைகள், கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊர் பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. கடந்த ஒரு வார காலமாக கொட்டாளிகுளம் அருகில் உள்ள விவசாய நிலங்களில் தென்னை மரங்கள், பாக்கு மரங்கள் , பலாமரங்கள் மற்றும் நெல் பயிர்களை அழித்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வளர்த்த மரங்களை யானைகள் வேரோடு பிடுங்கி விடுவதால் தங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுவதாக
விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மூன்று மாதங்கள் தொடர்ந்து எல்லா செலவுகளையும் செய்து முடித்து அறுவடைக்கு தயாராகும் நிலையில் இருக்கும் நெல் பயிர்களை காட்டுயானைகள் மிதித்து நாசம் செய்து விடுவதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
எனவே மாவட்ட வனத்துறை உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு புளியரைப் பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைகளை உடனடியாக வனப்பகுதிக்குள் விரட்ட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் புளியரை பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள
நஷ்டத்தை கணக்கிட்டு உடனடியாக அவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் காட்டு யானைகள் மீண்டும் விவசாய நிலங்களுக்கு வராமல் தடுக்கும் வகையில் வனத்துறையினர் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பகுதியில் காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்தால் விவசாயிகள் விவசாயம் செய்வதையே நிறுத்தி விடுவார்கள். இதனால் விவசாயம் அழிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தென்காசி மாவட்ட நிர்வாகம் உடனடியாக புலியரை பகுதி விவசாயிகளையும் விவசாய தொழிலையும் பாதுகாக்கும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர் புளியரை தங்கராஜ் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.