June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையநல்லூர் நகராட்சியில் நரேந்திர மோடியின் படம் மாயம்- பாஜக போராட்டம்

1 min read

Narendra Modi’s picture disappears in Kadayanallur Municipality – BJP protests

4.9.2025
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வைக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை காணவில்லை என்றும் உடனடியாக நரேந்திர மோடியின் படத்தை நகராட்சி கூட்ட அரங்கில் வைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி பாஜக கவுன்சிலர்கள் 3 பேர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடையநல்லூர் நகராட்சி கூட்டத்தில் பாஜக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய போது அதன் கூட்டணி கட்சியான அதிமுக கவுன்சிலர்கள் அதனை கண்டு கொள்ளாமல் கடந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடையநல்லூர் நகர் மன்ற சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் அப்துல் காதர், சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர், ஆய்வாளர்கள் மாதவராஜ் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் துவங்கியதும் கடையநல்லூர் நகர்மன்றத் துணைத் தலைவர் ராசையாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து 33 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட நிலையில், கடையநல்லூர் நகராட்சியில் தொடர்ந்து அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த தனித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, பல்வேறு வார்டுகளில் உள்ள குறைகளை அந்தந்த கவுன்சிலர்கள் எடுத்துரைத்த நிலையில், பாஜகவை சேர்ந்த கவுன்சிலர்கள் தங்களது வார்டு பகுதியில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படவில்லை எனக்கூறி பிரச்சினையில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து கடையநல்லூர் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பாரத பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்ட நிலையில், அந்த படம் மாயமானது எப்படி? எனக்கேட்டு நகர் மன்ற தலைவரிடம் பாஜக கவுன்சிலர்கள் சங்கரநாராயணன், மகேஸ்வரி, ரேவதி கபாலீஸ்வரன், ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை நகர்மன்ற கூட்டரங்கில் வைக்கும் வரை தாங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக்கூறி கூட்ட அரங்கிற்குள் பாஜக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக கவுன்சிலர்கள் தங்கள் தலைவர் நரேந்திர மோடியின் படத்தை காணவில்லை என்றும் உடனடியாக கூட்ட அரங்கில் மோடியின் படத்தை வைக்க வேண்டும் என்றும் கூறி உள்ளிருப்பு போராட்டம் நடத்திய போது பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுக உறுப்பினர்கள் 5 பேர்களும் மோடி படம் குறித்த விவாதத்தையும், உள்ளிருப்பு போராட்டத்தையும் கண்டு கொள்ளாமல் அதனை கடந்து சென்ற சம்பவம் வியப்பாக இருந்தது.

பாஜக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் இரவு 10 மணி வரை நீடித்தது அதனைத் தொடர்ந்து கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் கஹபிபுர் ரகுமான், கடையநல்லூர் நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், மற்றும் கடையநல்லூர் போலீசார் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய பாஜக கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன் பின் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் கடையநல்லூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *