June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம்

1 min read

Mallai Sathya removed from MDMK

8.9.2025
மதிமுக துணை பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யாவுக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.
இதற்கு பதில் அளித்திருந்த மல்லை சத்யா, தன்னை துரோகி என்று அழைத்ததற்கு பதில், தனக்கு விஷம் கொடுத்திருந்தால், அதை குடித்துவிட்டு இறந்து போயிருப்பேன் என கூறியிருந்தார்.
துரோகி என்று கூறிய வைகோவுக்கு எதிராக மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு மல்லை சத்யா தனது ஆதரவாளர்களுடன் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் கடந்த மாதம் 2-ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து கட்சி கட்டுப்பாட்டை மீறி, கண்ணியத்தை சீர்குலைத்தது, கட்சி தலைமைக்கு எதிராக செயல்படுவதாக மல்லை சத்யாவை மதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

ஒழுங்கு நடவடிக்கையை கைவிடக்கோரி 15 நாட்களுக்குள் மல்லை சத்யா எழுத்துப்பூர்மான விளக்கம் அளிக்கலாம் என்று வைகோ தெரிவித்திருந்தார். இதையடுத்து, வைகோவுக்கு மல்லை சத்யா எழுதிய கடிதத்தில், 32 ஆண்டுகளாக எங்கள் உழைப்பை உறிஞ்சி சக்கையாக தூக்கி எறிய துடிக்கும் உங்கள் பூர்ஷ்வா அரசியலை நாடு பார்க்கிறது. அதற்கான விலையை நிச்சயம் நாட்டு மக்கள் உங்களுக்கு வழங்கியே தீருவார்கள் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மதிமுகவில் இருந்து மல்லை சத்தியாவை நிரந்தரமாக நீக்கி பொதுச்செயலாளர் வைகோ இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மல்லை சத்யா கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, மல்லை சத்யா மதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *