ஆசிய கண்டத்தில் சிறந்த சுற்றுலா கிராமமாக மூணாறு தேர்வு
1 min read
Munnar selected as the best tourist village in Asia
17.9.2025
கேரள மாநிலம் மூணாறில் இயற்கை எழில்மிகு பகுதிகளும், பச்சை பசேல் என்ற தேயிலை தோட்டங்களும் நிறைந்து காணப்படுகின்றன. இந்த பகுதியில் வீசும் குளிர்ந்த காற்றை அனுபவித்தவாறு அங்குள்ள நீரோடைகள், ஆறுகளை கண்டு ரசிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
மேலும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ மாட்டுப்பட்டி, குண்டலை ஆகிய அணைகளும், எக்கோ பாயிண்ட் என்ற ஏரியும் உள்ளது. இங்கு பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களுக்கு பஞ்சமில்லை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலரும் இந்த பகுதியில் காணப்படுகிறது.
மேலும் இங்கு நிலவும் காலநிலை உள்நாட்டவர்களை மட்டுமின்றி, வெளிநாட்டவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் மூணாறு சிறந்து விளங்குகிறது.
இந்த நிலையில் மத்திய சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டு துறை, ஆசிய கண்டத்தில் சிறந்த சுற்றுலா கிராமமாக மூணாறை தேர்வு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை தற்போது கேரள அரசு வெளியிட்டுள்ளது. இதனால் மூணாறு பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.