June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

கரூர் சம்பவத்தில் விஜய்யை குற்றவாளியாக ஆக்கக்கூடாது – அண்ணாமலை பேட்டி

1 min read

Vijay should not be made a criminal in the Karur incident – Annamalai opinion

6.10.2025
சென்னையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது;

கரூர் சம்பவத்தில் விஜய்யை குற்றவாளியாக ஆக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் ஆசைக்காக வேண்டுமானால் விஜய்யை ஓரிரு நாள் கைது செய்து, பின்னர் விடுவிக்கலாம். தவெக, விஜய்க்கு அடைக்கலம் கொடுக்க, பாதுகாக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. தவெக நிர்வாகிகள் மீது தவறுகள் இருப்பது உண்மைதான். அதற்காக விஜய்யை குற்றவாளியாக ஆக்க முடியாது. தவெக நிர்வாகிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காத அரசு, அவர்களை பாஜகவினர் பாதுகாப்பதாக கூறுவதை ஏற்க முடியாது.

ராகுல் மணிப்பூர் செல்லும்போது பாஜக கரூர் வரக்கூடாதா? எங்கள் கொள்கை எதிரி திமுகதான். திமுகவை வீழ்த்துவதே பொது இலக்கு. நயினார் நாகேந்திரனுக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு இல்லை. டிடிவி தினகரன் மீது எனக்கு மதிப்பு உண்டு. கூட்டணிக்குள் சில கருத்து வேறுபாடு வருவது இயல்புதான். எல்லாம் விரைவில் சரியாகி விடும்.

தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் உள்ள மருந்து நிறுவனம் இருமல் மருந்தை தயாரித்து வருகிறது. இந்த மருந்தை அருந்திய 11 குழந்தைகள் மத்திய பிரதேசத்தில் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானில் இருவர் இறந்துள்ளனர். அது சம்பந்தமாக சிறப்பு புலனாய்வு குழு காஞ்சிபுரம் வந்துள்ளது.

மருந்து என்பது கெட்டுபோய்விட்டது என்று சொல்வோம். ஆனால் இந்த சம்பவத்தை பொறுத்தவரை மருந்து கெட்டுபோய்விட்டதாக சொல்ல முடியாது. அதில் யாரோ டை எத்திலீன் கிளைக்கால் கலந்துள்ளனர். தேவையில்லாத ஒரு பொருளை உள்ளே கலந்து, அது விஷமாக மாறியிருக்கிறது.

இது கவனக்குறைவா, வேண்டும் என்றே செய்ததா என்பதை அறிய நாம் காத்திருக்க வேண்டும். யார் இதில் தவறு செய்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நாடு முழுக்க நீங்கள் பார்த்தீர்கள் என்றால், எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூட, எப்படி மத்திய அரசை பயன்படுத்தி மாநிலத்தின் வளர்ச்சிக்கு எப்படி மத்திய அரசை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் எல்லாரும் பார்க்கின்றனர்.

ஆனால் தமிழகத்தில் மட்டும் மத்திய அரசை எதிரியாக கருதி முதல்வர் ஸ்டாலின் பேசும் பேச்சுகள் உள்ளன. மதுரை போகிறார், ராமநாதபுரம் போகிறார், மீனவ நண்பர்களை சந்திக்கிறார், சம்பந்தமே இல்லாமல் அவர்கள் செய்த தப்பை மறைப்பதற்காக கச்சத்தீவு பற்றி பேசுகின்றனர். ஆரோக்கியமாக எதை பற்றியும் பேசாமல் மத்திய அரசை தூண்டி விடுகின்றனர்.

தமிழ்நாடு யாருக்கு எதிராக போராடும் என்று கவர்னர் கேட்கும் கேள்வி சரிதான். இன்றைக்கு அவர்கள் போராடி கவர்னரை மாற்ற முடியுமா? அந்த பொறுப்பே இல்லாமல் செய்துவிட முடியுமா? அப்படி முடியாது. மக்களை வேண்டும் என்றே தூண்டிவிட்டு, மக்களை ஒரு போராட்ட மனநிலைக்கு திமுக கொண்டு செல்கிறது. இது ஒரு ஆளுங்கட்சி செய்யவேண்டிய வேலையே இல்லை.

ஆளும்கட்சி எல்லாவற்றையும் அனுசரித்துத்தான் போக வேண்டும். கவர்னர் அதன் அடிப்படையில் கேள்வி கேட்டுள்ளார். ஆனால் முதல்வர் மறுபடியும் கவர்னரிடம் இதுபற்றி கேட்கிறார். நமது நாட்டுக்கு இது நல்லதல்ல. தொடர்ந்து, ஒரு முதல்வர், கவர்னரை தொடர்ந்து சீண்டிக் கொண்டு இருப்பது, தமிழகத்திற்கு நல்லதல்ல என்பது எங்கள் கருத்து.”

இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *