June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லை: லஞ்ச வழக்கில் தீயணைப்புதுறை அதிகாரியை சிக்க வைக்க முயற்சி – சிசிடிவி வெளியாகி பரபரப்பு

1 min read

Nellai: Attempt to implicate fire department officer in bribery case

21.11.2025
நெல்லை பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. ‘பி’ காலனி 8-வது தெருவில் நெல்லை மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குனர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் துணை இயக்குனராக சரவண பாபு பணியாற்றி வருகிறார். இவரது அலுவலகத்தில் கடந்த 18-ந்தேதி மதியம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீரென சோதனை நடத்தினர்.

அப்போது துணை இயக்குனர் சரவணபாபு அறையில் 6 கவர்களில் கட்டுக்கட்டாக சுமார் ரூ.2 லட்சத்து 29 ஆயிரம் இருந்ததாக கூறி, அவருடைய உதவியாளரான தூத்துக்குடி தீயணைப்பு வீரர் செந்தில்குமார் என்பவரிடம் இருந்து ரூ.22 ஆயிரத்து 700-யும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்போது அலுவலகத்தில் இருந்த தீயணைப்பு துறை மண்டல துணை இயக்குனர் சரவணபாபு, அங்கிருந்து எடுக்கப்பட்ட பணத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் அது எப்படி தனது அலுவலகத்திற்குள் வந்தது என்றும் தெரியாது என்று கூறி இருந்தார். இதுதொடர்பாக துணை இயக்குனர் சரவணபாபு மற்றும் அவரது ஓட்டுனர் செந்தில் ஆகிய இருவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் 17-ந்தேதி நள்ளிரவில் மர்மநபர் ஒருவர் கையில் கவர்களுடன் துணை இயக்குனர் அலுவலகத்திற்கு செல்வது போன்ற வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. எனவே தீயணைப்பு துறை துணை இயக்குனரை லஞ்ச ஒழிப்பு போலீசில் மாட்டிவிடுவதற்காக சிலர் செய்த செயலாக இருக்குமோ? என்று கருதுகின்றனர். துணை இயக்குனர் அலுவலகத்துக்கு வந்து சென்ற மர்மநபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து நெல்லை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்த சரவணபாபு, கடமையில் நேர்மையான அனுகுமுறையால் ஹானஸ்ட் ஆபீசர் என்று பெயரெடுத்த தன் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தனக்கு வேண்டாத யாரோ மர்ம நபர் இந்த சதிவலையில் தன்னை சிக்க வைத்துள்ளதாக தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *