செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார்- விஜய் சால்வை அணிவித்து வரவேற்றார்
1 min read
Sengottaiyan joined Thaveka – Vijay welcomed him with a shawl
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜயின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவியை நேற்று (நவ. 26) அவர் ராஜினாமா செய்த நிலையில், இன்று தவெகவில் இணைந்துள்ளார்.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று குரல் எழுப்பிய செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து கடந்த அக்டோபர் மாதம் நீக்கப்பட்டார். இன்று தவெக கட்சி அலுவலகத்துக்கு சென்றார். அவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அப்போது, செங்கோட்டையனுக்கு தவெகவின் சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது, செங்கோட்டையனின் ஆதரவாளர்களும் உடனிருந்தனர்.
கட்சியில் இணையும் நிகழ்வில் “வேற்றுமைகளை களைந்து மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்” என்று செங்கோட்டையனும் அவரது ஆதரவாளர்களும் விஜய் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
செங்கோட்டையன் உறுதிமொழி ஏற்ற பிறகு, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் விஜய். அதன் பின் அவருக்கு பச்சை நிற சால்வை அணிவித்தார் விஜய். பிறகு, விஜய் தவெகவின் கட்சித் துண்டை செங்கோட்டையனின் கழுத்தில் அணிவித்தார்.
பிறகு விஜய் தவெகவின் உறுப்பினர் அட்டையை செங்கோட்டையனிடம் வழங்க, அதைப் பெற்றுக் கொண்டு தனது சட்டைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டார்.
அதன் பின், செங்கோட்டையன் விஜய்க்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்தார். மேடையில் விஜயிடம் சில நூல்களையும் விஜய்க்கு பரிசாக அளித்தார். அப்போது புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க இருவரும் அருகருகே நின்றபோது, செங்கோட்டையனின் கழுத்தில் இருந்த தவெக கட்சித் துண்டை சரி செய்தார் விஜய்.
தவெகவில் இணைந்த பிறகு தவெக நிர்வாகிகளுடன் இணைந்து கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “அதிமுகவில் எம்ஜிஆரால் நான் அடையாளம் காட்டப்பட்டவன். தலைவருக்கு பின்னால் அணிதிரண்டவர்களில் நானும் ஒருவன். அவர் கட்சி தொடங்கிய போது, இந்த கட்சி 100 நாட்கள் கூட ஓடாது என்று விமர்சித்தனர். ஆனால், மூன்று முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்துள்ளார். ஆனால் இன்றைய நிலைமைகள் வேறு. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஆட்சி நடத்தினோம். மூன்று கூறுகளாக பிரிந்தோம். எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் அது நடைபெறவில்லை. நான் என்று ஒருவன் நினைத்தால், ஆண்டவன் தான் என்று பார்த்துக்கொள்வான்.” என்று கூறினார்.
இன்று திமுக வேறு, அதிமுக வேறு அல்ல என்று குறிப்பிட்ட செங்கோட்டையன், இரண்டும் ஒன்றாக இணைந்து தான் பயணத்தை மேற்கொள்கிறார்கள் என்றார்.
மேலும், “இளவல் விஜய் மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார். தமிழகத்தில் ஒரு மாற்றம் வேண்டும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். 2026-ல் மாபெரும் புரட்சி உருவாகி வெற்றி என்ற இலக்கை இளவல் விஜய் எட்டுவார் என்று தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
செங்கோட்டையன் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, திமுக அமைச்சர் சேகர் பாபுவை சந்தித்தார் என்ற தகவலை மறுத்த அவர், “என்னை திமுக அல்லது தேசிய கட்சிகள் யாரும் சந்திக்கவில்லை” என்றார்.
அதிமுகவை ஒருங்கிணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்துவிட்டு, தவெகவில் இணைந்தது ஏன் என்று கேட்டதற்கு, “அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு நான் கெடு விதிக்கவில்லை. நீங்களாகவே செய்தி போட்டுவிட்டீர்கள். என்னை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கில் அவரும் காய் நகர்த்திவிட்டார்” என்றார்.
தவெக அலுவலகத்துக்கு வரும் போது ஜெயலலிதா புகைப்படத்தை சட்டைப்பையில் வைத்திருந்தது குறித்து கேட்டபோது, “யார் படத்தை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். புகைப்படத்தை எடுத்திருந்தால், இன்றே புகைப்படத்தை எடுத்துவிட்டார் என்று நீங்களே சொல்வீர்கள், ஒரே நாளில் இப்படி மாறிவிட்டார் என்று பேசுவீர்கள். பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் ஆகியோரின் புகைப்படங்கள் அவரது (விஜய்) வாகனங்களிலும் உள்ளன” என்று செங்கோட்டையன் பதிலளித்தார்.
விஜய் பேசியது என்ன?
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், செங்கோட்டையன் தனது கட்சியில் இணைந்த பிறகு அது குறித்து எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அதில் விஜய், “20 வயது இளைஞராக இருக்கும் போதே எம்ஜிஆர்-ஐ நம்பி அவரது மன்றத்தில் சேர்ந்தவர். அந்த சிறுவயதில் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெரிய பொறுப்பை ஏற்றவர். அதன் பின் அவருடைய பயணத்தில், அந்த இயக்கத்தின் இரு பெரும் தலைவர்களுக்கு (எம்ஜிஆர், ஜெயலலிதா) பெரிய நம்பிக்கைக்குரியவராக அரசியல் களத்தில் இருந்தவர். 50 ஆண்டுகளாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன், இன்று அவரது அரசியல் அனுபவமும், அவருடைய அரசியல் களப்பணியும் நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்துக்கு பெரிய உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன், அவருடன் இணைந்து பணியாற்ற நம்முடன் கைகோர்க்கும் அனைவரையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன்” என்று பேசினார்.