June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள்-கலெக்டர் விளக்கம்

1 min read

Crop protection measures in Tenkasi district-Collector’s explanation

10.12.2025
தென்காசி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை டித்வா புயல் காரணமாக நீரில் மூழ்கியுள்ள பயிர்களைப் பாதுகாத்திட விவசாயிகள் எடுக்கப்பட வேண்டிய பயிர் மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தென்காசி
மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தற்போது டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையின் காரணமாக தென்காசி மாவட்டத்தில் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள 121935 ஏக்கர் நெற்பயிர் மற்றும் 3.025 ஏக்கர் உளுந்து பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக முதற்கட்ட அறிக்கை வாயிலாக அறியப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி பாதிக்கப்பட்டுள்ள நெல் வயல்களில் ஏற்பட்டுள்ள சேதங்களைக் கண்காணித்திட மாவட்ட மற்றும் வட்டார அளவில் வெள்ளக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேளாண்மைத்துறை அலுவலர்களால் வருவாய்த் துறையுடன் இணைந்து வயல் ஆய்வு மூலம் 33 சதவீதத்திற்கு மேல் ஏற்படும் பயிர் பாதிப்பைக் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், நீரில் மூழ்கியுள்ள பயிர்களைப் பாதுகாத்திட எடுக்கப்பட வேண்டிய பயிர் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த முறையில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

எனவே விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களைச் சுற்றி தேங்கியுள்ள அதிகப்படியான நீரினை வடிகால் அமைத்து உடனடியாக வடித்துவிட வேண்டும். மழைக் காலங்களில் உரம் இடுதல் பூச்சி மருந்து தெளித்தல் களைக்கொல்லி இடுதல் போன்றவற்றைத் தவிர்த்திட வேண்டும். பூச்சி நோய் தாக்குதலைத் தொடர்ந்து கண்காணித்து பொருளாதார சேத நிலைக்கு மேல் இருந்தால் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். நெற் பயிரில் தழைச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடு (மஞ்சள் நோய்) காணப்பட்டால் 2 கிலோ யூரியாவுடன் 1 கிலோ ஜிங்க் சல்பேட் கலந்து 200 லிட்டர் நீருடன் கைத் தெளிப்பான் கொண்டு இலைவழியூட்டமாக தெளிக்க வேண்டும். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மேல் உரமாக தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து 25 சதவீதம் கூடுதலாக அளிக்க வேண்டும்.

மேலும் வயல் வரப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன் பசுந்தாள் உரப்பயிர்களை அதிக அளவில் பயன்படுத்தி யூரியா, டிஏபி போன்ற உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்த வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடர்ந்து டிசம்பர் மாதம் இறுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அவ்வப்போது ஏற்படும் பயிர் பாதிப்பு நிலவரங்களை வட்டார வேளாண்மை அலுவலர்களுக்குத் தெரிவித்து உரிய ஆலோசனைகளை பெற்று பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தோட்டக்கலைப் பயிர்களில் செடிகள், மரங்களைச் சுற்றி மண் அணைத்தல் ஊன்றுதலுக்கான குச்சிகளை நட்டுக் கட்டுதல், வாழை மரங்களுக்கு முட்டுக்கொடுத்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தென்னை மரங்கள் உள்ளிட்ட பல்லாண்டுப் பயிர்களில் அதன் தலைப்பகுதியின் சுமையை (மட்டை ஓலை) குறைத்து காற்றின் வேகத்திலிருந்து பாதுகாக்க வேண்டும். பசுமைக்குடில், நிழல்வலைக் குடில்களில் அதன் அடிப்பாகத்தை நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்க வேண்டும். சூரிய சக்தியினால் இயங்கும் பம்ப்செட்டுகளில் சோலார் பேனல்கள் அகற்றப்பட அல்லது அதன் சாய்வு கோணத்தினை 0° ஆக மாற்றி வைக்க வேண்டும். சூரிய சக்தி மின் வேலி அமைப்பின் சுவிட்சினை நிறுத்தி வைக்க வேண்டும்.

இவ்வாறு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *