June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

கலிதா ஜியா மரணம்- பிரதமர் மோடி இரங்கல்

1 min read

Khalida Zia passes away – Prime Minister Modi condoles her death

30.12.2025
அண்டை நாடான வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா (80), இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 13-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில், கலிதா ஜியா சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

கலிதா ஜியா 2 முறை பிரதமராக பதவி வகித்தார். 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரையும், 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரையும் பிரதமாக இருந்தார். அவர் வங்காளதேசத்தின் முதல் பெண் பிரதமர் ஆவார்.

கடந்த 1960-ம் ஆண்டு அப்போதைய ராணுவ அதிகாரியான ஜியாவுர் ரகுமானை திருமணம் செய்தார். வங்காளதேச சுதந்திரப் போரில் முக்கிய பங்காற்றிய ஜியாவுர் ரகுமான், வங்காளதேச தேசியவாத கட்சியை உருவாக்கி 1977-ம் ஆண்டு அதிபராக பொறுப்பேற்றார். 1981-ம் ஆண்டு மே மாதம் ஜியாவுர் ரகுமான் படுகொலை செய்யப்பட்டார். அதன்பின் 1984-ம் ஆண்டு வங்காள தேச தேசியவாத கட்சியின் தலைவராக கலிதா ஜியா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2007-ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கலிதா ஜியா கைது செய்யப்பட்டார். ஊழல் வழக்கில் அவருக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் போராட்டம் காரணமாக ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்து அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அதன்பின் சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து கலிதா ஜியா விடுதலை செய்யப்பட்டார். இதற்கிடையேதான் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கலிதா ஜியா தனது அரசாங்கத்தில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இலவச மற்றும் கட்டாய ஆரம்பக் கல்வி, 10-ம் வகுப்பு வரை சிறுமிகளுக்கு இலவசக் கல்வி, பெண் மாணவர்களுக்கு உதவித்தொகை, கல்விக்காக உணவுத் திட்டங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலிதா ஜியா உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவரது மகன் தாரிக் ரகுமான் லண்டனில் இருந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் வங்காளதேசம் திரும்பினார்.

ஷேக் ஹசீனா ஆட்சி காலத்தில் தாரிக் ரகுமான் மீது பல வழக்குகள் தொடரப்பட்டு இருந்த நிலையில் அந்த வழக்குகளை இடைக்கால அரசாங்கம் ரத்து செய்தது. இதையடுத்து தனது தாய் கலிதா ஜியாவை பார்க்க தாரிக் ரகுமான் நாடு திரும்பினார்.

அடுத்த ஆண்டு வங்கதேசத்தில் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், கலிதா ஜியாவின் மறைவு அக்கட்சிக்குப் பின்னடைவாக கருதப்படுகிறது.

அவரது மறைவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
“முன்னாள் பிரதமர் காலிதா ஜியா டாக்காவில் காலமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், வங்காளதேச மக்கள் அனைவருக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த துயரமான இழப்பைத் தாங்கிக்கொள்ள அவரது குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல இறைவன் மன வலிமையை வழங்குவாராக.

2015-ம் ஆண்டு டாக்காவில் நடைபெற்ற அவருடனான எனது சந்திப்பை நினைவுகூர்கிறேன். அவரது தொலைநோக்குப் பார்வையும், மரபும் நமது கூட்டாண்மையை தொடர்ந்து வழிநடத்தும் என்று நம்புகிறோம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *