ரெயில்களில் ஆர்ஏசி டிக்கெட்டிற்கு பாதி கட்டணம்- நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை
1 min read
Half fare for RAC tickets on trains – Parliamentary Standing Committee recommends
7.2.2026
ரெயில்களில் தற்போது, ஆர்.ஏ.சி. டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள், ஒரே படுக்கையை மற்றொரு பயணியுடன் பகிர்ந்து கொண்டாலும், முழு கட்டணத்தையே செலுத்துகிறார்கள். இதற்கு முழு கட்டணம் வசூலிப்பது, ரெயில்வே வழங்கி வரும் வழக்கமான சேவையோடு ஒத்துப்போகவில்லை என்பதை கவனித்த நாடாளுமன்றக் குழு, ரெயில்வே அமைச்சகத்திற்கு ஒரு பரிந்துரையை வழங்கியுள்ளது.
அதாவது, ஆர்.ஏ.சி. பயணிகளுக்கு பாதி கட்டணத்தை திரும்ப வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ள குழு, இதற்கான தெளிவான விதிகளை வகுத்து, அதன்பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக அளிக்க ரெயில்வே அமைச்சகத்தை கேட்டுள்ளது.
மேலும், குறைந்த சராசரி வேகம் கொண்ட ரெயில்களை ‘சூப்பர் பாஸ்ட்’ என குறிப்பிடுவதையும் குழு கேள்வி எழுப்பியுள்ளது.
2007-ல் உருவாக்கப்பட்ட விதிகளின் கீழ், அகலப்பாதையில் சராசரியாக மணிக்கு 55 கி.மீ. வேகத்திலும், மீட்டர் கேஜ் பாதையில் மணிக்கு 45 கி.மீ. வேகத்திலும் இயங்கும் ரெயில்களே ‘சூப்பர் பாஸ்ட்’ தகுதி பெறுகின்றன. தற்போது இந்த வேகம் மாறிவிட்டது. ஆனால் அந்த விதிமுறைகள் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக திருத்தப்படவில்லை என்றும் அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது.
அதேபோன்று, நெரிசல் மற்றும் தாமதங்களுக்கு வழிவகுக்கும் வகையில் புதிய ரெயில்களை அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக, தற்போது உள்ள எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் சேவைகளின் நேரத்தை முறையாக கடைப்பிடிப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறும் குழு அறிவுறுத்தியுள்ளது.