எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை 2 மணி வரை ஒத்தி வைப்பு
1 min read
Lok Sabha adjourned till 2 pm due to opposition uproar
9.2.2026
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், கடந்த மாதம் 28ம் தேதி ஜனாதிபதி உரையுடன் துவங்கியது. இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் அரசின் சாதனைகள், எதிர்கால திட்டங்களை விளக்கி, ஜனாதிபதி முர்மு உரையாற்றினார். ஜனாதிபதி உரையின் போதே, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பிப். 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. அந்த விவாதத்தை ஆக்கப்பூர்வமாக நடத்த விடாமல், பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி, காங்கிரஸ், திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் உச்சமாக, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர், பிரதமரின் இருக்கை அருகே சென்று அவரை நோக்கி கோஷமிட்டனர்.
மக்களவையில் பிரதமர் மீது எம்.பி.,க்கள் சிலர் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம், பிரதமரின் உரை இடம் பெறாமலேயே மக்களவையில் நிறைவேறியது. மக்களவை நேரத்தை எதிர்க்கட்சி எம்பிக்கள் வீணடித்து வருவதாக சபாநாயகர் ஓம்பிர்லா அதிருப்தி தெரிவித்து இருந்தார்.
இந்த சூழலில் மக்களவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியவுடன் யு-19 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு அவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கவிருந்த நிலையில், இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், பகல் 12 மணி வரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
மீண்டும் பகல் 12 மணிக்கும் அமளி தொடர்ந்ததால் பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடியின் பதிலுரை இல்லாமலேயே கடந்த வாரம் நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். அவையில் விவாதிக்க மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மறுத்துவிட்டார். தொடர்ந்து மசோதாக்கள் மீதான விவாதம் நடந்து வருகிறது.