June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

கோள்களை காலி செய்த குள்ள நட்சத்திரங்கள்- பூமிக்கும் ஆபத்தா?

1 min read

Dwarf stars that have emptied planets – are they a danger to Earth?

7.6.2026
சூரிய குடும்பத்தில் பூமி உள்ளிட்ட கோள்கள், ஈர்ப்பு விசை உதவியுடன் குறிப்பிட்ட தொலைவில் சூரியனை சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. வருங்காலத்தில் சூரியன் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு விரிவடைந்து, சூரிய குடும்பத்தில் உள்ள பிற கோள்களையும், பூமியையும் விழுங்கி விடும் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.

இந்த சூழலில், கீலே பல்கலைக்கழகம் மற்றும் எக்சடர் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அண்டவெளி உருவான காலத்தில் இருந்து தங்களுடன் அருகருகே இருந்த பிற கோள்களை, சில இளம் நட்சத்திரங்கள் விழுங்கி உள்ளன என்றும் அதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன என்றும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதற்காக ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களின் தரவுகளை ஆய்வு செய்துள்ளனர். அதில், பூமி போன்ற மிக கடினத்தன்மை வாய்ந்த கோள்களை 6 சிவப்பு குள்ள நட்சத்திரங்கள் விழுங்கி விட்டன. அவற்றின் வயது 50 முதல் 200 மில்லியன் ஆண்டுகள் ஆகும்.

இதுபற்றி கீலே பல்கலைக்கழக தலைமை பேராசிரியர் ராபின் ஜெப்ரீஸ் கூறும்போது, இந்த குள்ள நட்சத்திரங்கள் எப்படி பிற கோள்களை விழுங்கியுள்ளன என்பதற்கான ஆராய்ச்சியின் பலனாக, அவற்றில் லித்தியம் என்ற ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
குள்ள நட்சத்திரங்கள் வெளியே குளிர்ந்தும், உள்ளே அதிவெப்பத்துடனும் இருப்பவை. சூரியனை விட அளவில் சிறியன என்றாலும், பெரிய கோள்களை அடித்து காலி செய்யும் திறன் பெற்றவை. குள்ள நட்சத்திரம் ஒன்றின் உள்ளே ஏற்படும் அணுசக்தி வினைகளால், அவை உருவானவுடன் அவற்றின் உள்ளே உள்ள லித்தியம் முற்றிலும் அழிக்கப்பட்டு விடும்.
ஆனால், தற்போது நடந்த ஆய்வில் அவற்றின் வளிமண்டலத்தில் லித்தியம் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த 6 குள்ள நட்சத்திரங்களும் சம காலத்தில் உற்பத்தியான சகோதர குள்ள நட்சத்திரங்கள் ஆகும். ஆனால், வெவ்வேறு தருணங்களில் கோள்களை விழுங்கி உள்ளன.

ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களின் தரவுகளில் மேற்கொண்ட ஆய்வில், இந்த 6 குள்ள நட்சத்திரங்களில் கூடுதலான அளவு லித்தியம் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவற்றை சுற்றி வலம் வரக்கூடிய, பூமி போன்ற அளவுள்ள கோள்களையோ அல்லது பூமியை போன்று 3 முதல் 10 மடங்கு எடை கொண்ட கோள் சார்ந்த பொருட்களையோ அவை விழுங்கியிருக்கின்றன. அதற்கான சான்றாகவே இந்த ரசாயனம் உள்ளது என அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.

விஞ்ஞானிகளின் இந்த விளக்கம் சரியாக இருக்குமென்றால், இளம் நட்சத்திரங்களின் இயக்கம், பிற கோள்களை குள்ள நட்சத்திரங்கள் விழுங்குவது எப்படி? எந்த தருணத்தில் அது நிகழ்கிறது போன்ற விசயங்களை ஆய்வு செய்வதற்கான ஒரு புதிய வழி பிறக்கும் என தெரிய வருகிறது.

இதனால், அண்டவெளியில் குள்ள நட்சத்திரங்கள் ஒரு கூலிப்படை போன்று செயல்பட்டு பிற கோள்களை அடித்து, காலி செய்யும் வேலைகள் சத்தமின்றி நடந்து வருகின்றன. நம்முடைய சூரிய குடும்பத்திற்கு அருகே இந்த குள்ள நட்சத்திரங்கள் உள்ளன. அதனால், இவை பூமிக்கும் ஆபத்து ஏற்படுவதற்கான சாத்தியம் உண்டா? என்பது பற்றியும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *