June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

திருமணம் செய்ய காதலன் மிரட்டியதால் ஆசிரியை தற்கொலை

1 min read

Teacher commits suicide after boyfriend threatens to marry her

18.2.2026
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ள அழகனூர் ஆசாரி பட்டறை பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவரது மகள் சண்முகப்பிரியா (வயது 22). தனியார் பள்ளி ஆசிரியை. இவருக்கும். தாரமங்கலம் அருகே உள்ள அமரகுந்தி பகுதியை சேர்ந்த கவுதம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக கவுதமின் நடவடிக்கை சரியில்லாததால் சண்முகப்பிரியா அவருடனான காதலை கைவிட்டு விட்டார். இருப்பினும் கவுதம் சண்முகப்பிரியாவை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். மேலும் அவர், விஜயலட்சுமியிடம், சண்முகப்பிரியாவை திருமணம் செய்ய பெண் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் தனது வீட்டுக்கு வரக்கூடாது என்று கவுதமிடம், விஜயலட்சுமி கூறி உள்ளார்.

இந்த நிலையில் விஜயலட்சுமி வீட்டுக்கு மீண்டும் வந்த கவுதம் தனக்கு சண்முகப்பிரியாவை திருமணம் செய்து கொடுக்கவில்லை என்றால் அவரது போட்டோவை சமூக வலைத்தளத்தில் அனுப்பி விடுவேன் என்று கூறி மிரட்டி சென்றதாக கூறப்படுகிறது. நேற்று காலை விஜயலட்சுமி வேலைக்கு சென்று விட்டார். சண்முகப்பிரியாவின் அக்காள் மைதிலிபிரியா தனது தாயார் வீட்டுக்கு வந்தார்.

அப்போது சண்முகப்பிரியா வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுள்ளார். இதனால் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மகுடஞ்சாவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. இது குறித்து மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சண்முகப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சண்முகப்பிரியா வீட்டில் கடிதம் ஒன்று எழுதி வைத்து இருந்ததாக தெரிகிறது. அதில் கவுதம் மீது நடவடிக்கை எடுக்கு மாறு குறிப்பிட்டு உள்ளார்.

அந்த கடிதத்தில் உருக்கமாக எழுதி உள்ள விவரம் வருமாறு:-

எந்த பெண்ணிற்கும் இந்த நிலை வரக்கூடாது. என்னால முடியல. மன்னிசிருங்க, நடுவில் வந்த அவன் என் வாழ்க்கையை கெடுத்துவிட்டான். இவன் என்னை வாழ விடமாட்டான். அப்பா இல்லாமல் என்னை வளர்த்தீங்க நான் இவ்வளவு கஷ்டத்தை உங்களுக்கு கொடுத்துவிட்டேன்.

என்னை மன்னித்து விடுங்கள் அம்மா, அக்கா, மாமா உங்களுக்கு பொண்ணாக இல்லாமல் போகிறேன். எல்லாரும் நிம்மதியாக இருங்க, கஷ்டபடாதீங்க. லைப் இப்படிதான் முடிவு இருக்கு போலா, முடிந்து போயிடுச்சி, நீங்கள் எல்லாம் உங்கள் லைப்பை பாருங்க..என்னை நினைச்சு அழுதுகிட்டு இருக்காதீங்க. நான் ரொம்ப வாழனும்ன்னு ஆசைப்பட்டேன். இவ்வளவு நாள் அட்ஜெஸ்ட் பண்ணேன் ஆனால் இதுக்கு மேல என்னால முடியல, அவன் ரொம்ப டார்ச்சர் பன்னிட்டான். என் மனதை கெடுத்துட்டான். யார் யார் முன்னாடி நான் நல்லா வாழனும்னு நெனச்சேனோ, எல்லார் முன்னாடியும் என்னை தலை குணிய வச்சிட்டான், அவனை வாழ விடாதீங்க, என்னை நினைச்சு கவலை படாதீங்க.

நான் கும்மிட்ட சாமி கூட எதும் என் கூட நிக்கல, இதுக்கு மேல ஒவ்வொரு நிமிஷமும் செத்துக்கிட்டு இருக்க முடியாது. நான் யாருக்கும் மனதால கெட்டது நெனச்சதுல்ல, உங்க எல்லாருக்கும் அது தெரியும். கவுதம விட்ராதீங்க, வாழனும்னு ஆசைப்பட்டேன். அவன் விடல, அவனும் வாழ கூடாது, என்னை சித்ரவதை பன்னிட்டான், எனது குடும்பத்தை தூங்கவிடாத அளவுக்கு பன்னிட்டான், எனக்கு ஒன்னுனா நீ அவனை சும்மா விட மாட்டாய் என தெரியும் அக்கா. அந்த நம்பிக்கையில தான் இந்த முடிவை எடுக்கிறேன்.

இப்பவும் சொல்றேன் கவுதமை விட்ராதீங்க, நான் கணவர் குடும்பம் என்று வாழனும்னு ஆசைப்பட்டேன், ஆனா முடியல, இது எல்லாத்திற்கும் கவுதம் மட்டும் தான் காரணம். என் வாழ்க்கையை அழிச்சுட்டான். எனது மானம், மரியாதை எல்லாம் அவனால போச்சு, என்ன ஆனாலும் அவனை விடாதீங்க. நான் செத்தாலும் அவனை சும்மா விடமாட்டேன். நான் மகிழ்ச்சியா வாழனும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனால் அவன் என்னை விடவில்லை. அவனால குடும்ப பெயரை கெடுத்துட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். அவனை நம்புனது ரொம்ப தப்பு தான்.

இவ்வாறு அவர் எழுதி உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *