June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

லண்டனில் சிறுமிகளுக்கு நிகழும் கொடுமை

1 min read


Abuse of girls in London

22.2.2026
இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பல்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதாகவும், இந்த கும்பல்களால் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட கொடுமைகளுக்கு ஆளாகி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த சூழலில், லண்டனில் போதைப்பொருள் கும்பல்களால் சிறுமிகளுக்கு நிகழும் கொடுமைகள் குறித்து ஆங்கில நாளிதழில் வெளியாகியிருக்கும் அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருக்கும் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிவைத்து சில கிரிமினல் கும்பல்கள் இயங்கி வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை இவர்கள் அதிகமாக குறிவைக்கின்றனர். அந்த சிறுமிகளுக்கு பணம், விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் ஆகியவற்றைக் கொடுத்து தங்கள் வசம் அவர்களை இழுக்கின்றனர். இதில் சிலருக்கு போதைப்பொருள் பழக்கத்தையும் அறிமுகப்படுத்துகின்றனர்.

இந்த சிறுமிகள் தங்களின் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு, கிரிமினல் கும்பலைச் சேர்ந்தவர்கள் அந்த சிறுமிகளிடம் தாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப கேட்கின்றனர். பணத்தை கொடுக்க முடியாத சிறுமிகளை கட்டாயப்படுத்தி, அல்லது மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்கின்றனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட சிறுமியான கெல்லி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறுகையில், “என்னிடம் 3 ஆண்கள் நட்பாக பழகி கொஞ்சம் கொஞ்சமாக போதைப் பழக்கத்திற்கு என்னை அடிமையாக்கினர். எனக்கு பொருளாதார ரீதியாக நிறைய தேவைகள் இருந்தது. அந்த ஆண்கள் என்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தனர். தெருக்களில் போதைப்பொருள் விற்பனை செய்ய வைத்தனர்” என்று கூறியுள்ளார்.

மேலும், கிரிமினல் கும்பலைச் சேர்ந்த பலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், போதைப்பொருளுக்கு அடிமையான தன்னை அவர்கள் தங்கள் தேவைக்கு பயன்படுத்திக் கொண்டார்கள் என்றும் அந்த சிறுமி தெரிவித்துள்ளார்.

இதேபோல், பாதிக்கப்பட்ட மற்றொரு சிறுமி(வயது 15) கூறுகையில், “என்னை தினந்தோறும் வெவ்வேறு ஆண்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள கட்டாயப்படுத்தினார்கள். சில சமயங்களில் ஒரு மாதத்தில் 10 முதல் 15 நபர்கள் வரை என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்கள்” என்று கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய செயல்களில் ஈடுபடும் நபர்கள் பெரும்பாலும் சிறுமிகளை குறிவைத்து, அவர்களின் இயலாமையை பயன்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. தற்போது வரை தெற்கு லண்டனில் மட்டும் சுமார் 60 சிறுமிகள் கிரிமினல் கும்பல்களின் பிடியில் சிக்கி இருக்க வாய்ப்புள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த கிரிமினல் கும்பல்களின் பிடியில் இருந்து சம்பந்தப்பட்ட சிறுமிகள் தப்புவது மிகவும் கடினமான காரியம் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவரும், லண்டன் நகரின் முதல் முஸ்லிம் மேயருமான சாதிக் கானிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘இதுபோன்ற கும்பல்கள் லண்டனில் இயங்குவதாக எந்த ஆதாரமும் இல்லை’ என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *