தமிழகம் முழுவதும் இதுவரை ரூ.151 கோடி பறிமுதல்
1 min read
Rs. 151 crore seized across Tamil Nadu so far
23.3.2026
தமிழகத்தில் ஏப்.23-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை கட்டுப்படுத்தும் வகையில், தேர்தல் கமிஷன் 50,000 ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லும்போது உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதை கண்காணிக்க, மாவட்டம் முழுவதும் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.151 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நடைபெறும் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் இதுவரை ரூ.151 கோடி பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் தொடர்பாக சி-விஜில் செயலி மூலம் இதுவரை 794 புகார்கள் பெறப்பட்டுள்ளன. 20 புகார்கள் பரிசீலனையில் உள்ளன, மற்ற அனைத்து புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்களில் 50 சதவீதம் பேருக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளை கணக்கிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.