பனையூரில் இருந்து முடிவெடுப்பேன் என்ற காலம் மாறிவிட்டது – அண்ணாமலை பேச்சு
1 min read
The days of making decisions from Panaiyur are over – Annamalai’s remarks.
16/8/2026
சென்னையில் இன்று அண்ணாமலை தலைமையில், ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. எழும்பூர் ராஜ ரத்தினம் விளையாட்டரங்கம் அருகே பேரணி நடந்தது. நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்னர்.
பேரணியில் அண்ணாமலை பேசியதாவது:-
20 லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆகஸ்ட் மாதம் முதல் சுற்றுச் சூழல் மாதமாக கொண்டாடுகிறோம். ஒவ்வொரு தனி மனிதனும், அவர்களால் முன்வந்து இந்த மாற்றத்தில் நாங்களும் இருக்கிறோம் என்று சொல்ல வேண்டும்.
தாமிரபரணியை சுத்தம் செய்ய ஆரம்பித்து இருக்கிறோம். வைகை நதியை சுத்தம் செய்கிறோம். பரமத்தி வேலூர் துவங்கி காவிரி ஆற்றை சுத்தம் செய்ய ஆரம்பித்து உள்ளோம். கன்னியாகுமரியில் இருந்து தூத்துக்குடி வரை 175 கிமீ., கடற்கரையை நான்கு வாரமாக சுத்தம் செய்து வருகிறோம்.
வீ தி லீடர்ஸ் அமைப்பு பொறுத்தவரை ஒரு பணியை எடுத்த பின்பு,முழுமையாக முடித்துக் காட்டி 365 நாள் முடியும் போது மக்கள் மாற்றத்தை பார்க்க வேண்டும். இங்கு யாரும் தொண்டர் கிடையாது. அனைவரும் தலைவர் என்ற வகையில் பணியினை செய்து கொண்டு இருக்கிறோம். இந்த மாதம் மட்டும் 16 நாளில் 1,400 க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் தமிழகத்தில் சுற்றுச்சூழல் தொடர்பாக நடந்துள்ளது.
ஒரு லட்சத்து 6 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை வீ த லீடர்ஸ் அமைப்பு எடுத்துள்ளது. எத்தனை பேர், பாதுகாப்பு உபகரணங்களை போடாமல் குப்பையை எடுப்பதை பார்க்கும் போது மனம் வலிக்கிறது. வைகை நதியில் நிக்கவே முடியாத அளவுக்கு குப்பை கூளம். நமது தொண்டர்கள். அதை எடுக்கும்போது மூச்சு விட முடியவில்லை. நமது தொண்டர்கள் முகம் சுழிக்காமல் உள்ளே இறங்கி வைகை தாயை சுத்தம் செய்கின்றனர். காவிரி, தாமிரபரணி தாயை சுத்தம் செய்கின்றனர். இது தான் நமக்கு வேண்டும்.
அடிப்படை அரசியல் கட்டமைப்பு, நல் அரசியல் கட்டமைப்பு வேண்டும் என்றால், வரக்கூடிய தொண்டர்கள், தலைவர்கள் யாராக இருந்தாலும், சேவை மனப்பான்மையோடு வந்தால் தான் அடிப்படை அரசியல் கட்டமைப்பை மாற்ற முடியும். வீ தி லீடர்ஸ் அமைப்பு நாம் எல்லோரும் தலைவராக ஒவ்வொரு படியாக சென்று கொண்டு இருக்கிறோம்.
இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட எந்த அமைப்புக்கு 73 நாளில் 20 லட்சம் பேர் தொண்டர்களாக இருக்கின்றனர். எத்தனை அமைப்புகளில் இருக்கின்றனர். ஆண்டாண்டு காலமாக இருந்த அமைப்புகள், அரசியல் கட்சிகள் உள்ளன. இலக்கு 50 லட்சத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம்.
நமக்கு எண்ணிக்கை வேண்டாம். நமது அமைப்பை பார்த்து, வேலையை பார்த்து மாற்றத்தை பார்த்து ஒவ்வொருவராக வந்து 50 லட்சம் பேரை எட்ட வேண்டும். 20 லட்சம் பேரிடம் ஆளுக்கு ஒவ்வொருவராக அழைத்து வாருங்கள். எண்ணிக்கை 40 லட்சம் ஆகிவிடும் என்று சொல்லலாம். ஆனால், வீ தி லீடர்ஸ் அமைப்பின் நோக்கம் அது இல்லை.
மாற்றத்துக்காக வரக் கூடிய 50 லட்சம் பேர் வந்த பிறகு, அரசியலாக மாற்றி,மக்களுக்கான அரசியலாக கையில் எடுக்கப் போகிறோம். நமக்கு பொறுமை மிகவும் அவசியமாக இருக்கிறது.
அடிப்படை அரசியலில் இருந்து மாற்ற வேண்டும் என்று வந்துள்ளோம். தலைவர்கள் டில்லியில் அமர்ந்து தமிழகத்துக்கான முடிவை எடுக்கக்கூடாது. சென்னையில் முக்கியமான வீட்டில் அமர்ந்து தலைவர்கள் முடிவு எடுக்கக்கூடாது. தலைவர்கள், ஒவ்வொரு கிராமத்திலும் கிராமத்துக்கான முடிவை எடுக்க வேண்டும். ஒவ்வொரு நகரத்திலும் தலைவர்கள் அமர்ந்து அந்த முடிவை எடுக்க வேண்டும்.
டில்லியின் காலம், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், போயஸ் கார்டனில், ஈசிஆர் பனையூரில், கோபாலபுரத்தில் அமர்ந்து தான் முடிவு எடுப்பேன் என்ற காலம் மாறிவிட்டது. யாரையும் குறையாக சொல்லவில்லை. அடிப்படையில் இருக்கும் தலைவர்கள், அவர்கள் ஊருக்கான, சமுதாய பிரச்னைக்கு முடிவு எடுக்கும்போது தான் நிலையான அடிப்படை மாற்றம் நடக்கும்.
தமிழகம், இந்திய அளவில் நிலத்தடி நீரை ஒவ்வொரு ஆண்டும் 73 சதவீதம் உறிஞ்சி எடுக்கிறோம். மழை வரவில்லை என்றால், வறட்சி வரும். இதனால் தான் ஏரி குளங்களை சுத்தம் செய்கிறோம்.
தமிழகத்தில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 957 நீர் நிலைகள் உள்ளன. 50,197 நீர்நிலைகளில் தண்ணீர் இல்லை. ஜல்சக்தித்துறை அமைச்சர் அளித்த புள்ளி விவரம் இது. ஆக்கிரமிப்பில் வீடு கட்டி உள்ளனர்.
நிறைய பேர் அண்ணாமலை அரசியல் பேசவில்லை என்கின்றனர். அவர் அரசியல் பேச வேண்டும் என்கின்றனர். இந்த உலகத்தில் அரசியல் பேசுவது தான் மிகவும் எளிமையான வேலை.
இன்று அரசியல் எப்படி இருக்கிறது என்று யோசித்து பாருங்கள்.’ எதிர்க்கட்சியாக இருந்தால் ஆளுங்கட்சி சரியில்லை. ஆளுங்கட்சியாக இருந்தால் எதிர்க்கட்சி சரியில்லை’. இந்த அரசியலை பேசுவதற்கு அண்ணாமலை ஏன் அங்கு செல்ல வேண்டும்.
நாம் இந்த அரசியலை செய்வோம். அடிப்படை மாற்றத்துக்கான அரசியல் செய்வோம். இப்போது தான் தமிழகத்தில், மக்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ புரட்சி நடந்துள்ளது. முதல்வர் ஆட்சிக்கு வந்துள்ளார். ஓராண்டு காலம் கொடுங்கள் என அனைவரிடமும் சொல்கிறேன்.
108 எம்எல்ஏக்கள் முதல்முறையாக சட்டசபை வந்துள்ளனர். 234 பேரில் 154 பேர் புதிதாக வந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு வருடம் கொடுப்போம். வேலையை செய்யட்டும். வேலையை செய்யவில்லை என்றால், முதல் குற்றச்சாட்டு வைப்பது நாமாக தான் இருப்போம்.
இன்று தமிழகத்தில் நீங்கள் அரசியல் செய்யவில்லை என்று, என்னிடம் எதிர்க்கட்சி நண்பர்கள் சொல்கின்றனர். ஆளுங்கட்சியை கவிழ்த்து, ஆட்சிக்கு வருவது தான் எதிர்க்கட்சிகளின் வேலையாக உள்ளது. 10 எம்எல்ஏக்களை பிடித்து வந்து ஆட்சியை கவிழ்க்க நினைக்கின்றனர்.
தவறாக ஆட்சி செய்தால், அரசே கவிழும். ஒரு வருடம் ஆட்சி செய்யட்டும். காலில் வெந்நீரை ஊற்றியது போல் சுற்றி கொண்டு இருக்கின்றீர்கள்.
இன்னும் சிலர் அண்ணாமலையை பாஜவின் பீ டீம் என்கின்றனர். அமித் ஷா என்னிடம் ஒரு விஷயம் சொன்னார். என்னை டில்லிக்கு வர கூறினார். டில்லியில் பொறுப்பு எடுக்க சொன்னார். மூன்றரை ஆண்டுகள் டில்லியில் இருக்க வேண்டும் என்றார். நான் வேண்டாம் என கூறி விட்டேன்.
சிலர் அமெரிக்கா போவதாக சொல்கின்றனர். டில்லியே போகாதவன் அமெரிக்கா செல்வேனா?
அரசியல் செய்யும் போது கொள்கையோடு தான் அரசியல் செய்து இருக்கிறேன். பாஜ மாநில தலைவராக இருந்த போது, மேகதாது அணை கட்டும் முயற்சி செய்த போது, கர்நாடக பாஜ அரசை எதிர்த்து தமிழக பாஜ சார்பில் போராட்டம் நடத்தினேன்.
கட்சியில் இருந்த போதும் சரி, கட்சியில் இல்லாத போதும் சரி தமிழனத்திற்காக மட்டும் நின்று இருப்போம். நிற்போம். மாற்றத்துக்காக உங்களுடன் இருப்போம். பினபுற வாசல் வழியாக ஆட்சியில் அமர்ந்து, அதிகாரத்தின் சுவையை பிடிப்பது தவறு. பாவம். மக்களுடன் இருந்து பணி செய்து மக்களால் தேர்வு செய்யப்படும் அமைப்பாக வீ தி லீடர்ஸ் அமைப்பு இருக்கும்.
மேகதாது அணை கட்டுவதை இன்றும் எதிர்க்கிறோம். இதனை அரசியலுக்காக சொல்லவில்லை. மேகதாது எதிர்க்கிறோம் என்று சொன்னால் மத்திய அரசு நம்புகிறோம். இரு மாநிலத்துக்கு பிரச்னை வரும்போது, ஒரு மாநிலம் அணை கட்டும் போது, கீழ்பாசன மாநிலங்கள் எதிர்த்தால் அணை கட்ட முடியாது. 2021-2022 ல் கட்ட முடியாது என்று சொன்ன மத்திய அரசு, கர்நாடகா கட்டுவது பிரச்னை இல்லை என்று சொல்வது மனம் வலிக்கிறது. பிரதமர் மோடி, இரு மாநில முதல்வர்களை அழைத்து பேசிமுடிவு காண வேண்டும்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.