பாப்கார்ன் விற்பனை உயர்வு: இறக்குமதியை குறைக்க உள்நாட்டு மக்காச்சோள உற்பத்தி அதிகரிப்பு
1 min read
Popcorn sales rise: Domestic maize production increases to reduce imports
27/3/2026
தற்போதைய இளம் தலைமுறையினர் சாட் மற்றும் துரித உணவுகளையே அதிகம் விரும்புகின்றனர். பெரும்பாலானோரின் இரவு நேர உணவு இதுவாகவே இருக்கிறது. ஆனால், இதையும் தாண்டி மக்காச்சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் பாப்கார்ன்களை கொரித்து சுவைப்பதையும் பலர் விரும்புகின்றனர். தியேட்டர்களில் சினிமா இடைவேளையின்போது, பாப்கார்ன் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.
நாடு முழுவதும் இப்படி பாப்கார்ன் விற்பனை அதிகரித்துள்ளதால், மக்காச்சோளத்தின் தேவையும் கூடியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2014-15-ம் ஆண்டில் நாட்டின் மக்காச்சோள உற்பத்தி 50 ஆயிரம் டன்னாக (ஒரு டன் என்பது ஆயிரம் கிலோ) இருந்தது. அப்போது, மக்காச்சோள இறக்குமதி அதிகமாக இருந்தது.
இந்த நிலையில், இந்தியாவிலேயே மக்காச்சோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 2025-26-ம் ஆண்டில் மக்காச்சோள உற்பத்தி 1 லட்சத்து 30 ஆயிரம் டன் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால், 2030-ம் ஆண்டில் மக்காச்சோள உற்பத்தி 1 லட்சத்து 80 ஆயிரம் டன்னாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், நாட்டிலேயே மக்காச்சோள உற்பத்தி அதிகரித்தால், 2029-ம் ஆண்டுக்கு பிறகு வெளிநாடுகளில் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய வேண்டிய நிலையே இருக்காது என்றும், அதன் மூலம் ரூ.810 கோடி அளவுக்கு அன்னிய செலவாணியை சேமிக்க முடியும் என்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலான ஐ.சி.ஏ.ஆர். தெரிவித்துள்ளது.