June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் உரிமம் ரத்து செய்தது ரிசர்வ் வங்கி

1 min read


Reserve Bank has canceled the license of Paytm Payments Bank

25.4.2026
நொய்டாவை தலைமையிடமாக கொண்டு பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்காக அந்த ஆண்டு ரிசர்வ் வங்கியிடம் இருந்து உரிமம் பெற்று இருந்தது.

தற்போது இந்த வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த வங்கி மற்றும் அதன் வாடிக்கையாளர்களின் நலன்களுக்குப் பாதகமான முறையில் வங்கி நடைமுறைகள் இருந்ததால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

அதில், ‘வாடிக்கையாளர்களின் நலன்களுக்கும், பொதுநலனுக்கும் பாதகமாக பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி நிர்வாகத்தின் பொதுவான தன்மை உள்ளது. இதனால் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி எந்த விதமான வங்கி நடவடிக்கைகளிலும் ஈடுபட தடை விதிக்கப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டு இருந்தது. குறிப்பாக, வங்கியின் மேலாண்மை மற்றும் நிர்வாக முறை திருப்திகரமாக இல்லை என்றும், வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் விதிகளை இந்த வங்கி தொடர்ந்து மீறி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியை தொடர்ந்து செயல்பட அனுமதிப்பது பொதுமக்களுக்கு எந்த நன்மையையும் தராது என்பதால், உரிமத்தை ரத்து செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மேலும் வங்கியைக் கலைப்பதற்காக ஐகோர்ட்டில் ஒரு மனுவை சமர்ப்பிக்க இருப்பதாக கூறியுள்ள ரிசர்வ் வங்கி, அப்படி வங்கியைக் கலைக்கும்போது, தனது முழு வைப்புத்தொகைப் பொறுப்பையும் திருப்பிச் செலுத்துவதற்குப் போதுமான பணப்புழக்கத்தை இந்த வங்கி கொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளது.

முன்னதாக கடந்த 2024 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், வாடிக்கையாளர் கணக்குகளில் புதிய டெபாசிட்டுகள், வாலட் டாப்பப்கள் மற்றும் கிரெடிட் பரிவர்த்தனைகளை செய்யத் தடை விதிக்கப்பட்டது. இந்த தடைகள் வங்கியின் வளர்ச்சியை ஏற்கனவே முடக்கியிருந்த நிலையில், தற்போது உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *