June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

17 தொகுதிகளில் வெற்றி; புதுச்சேரியில் மீண்டும் ரங்கசாமி ஆட்சி

1 min read

Rangasamy rules again in Puducherry, wins 17 seats

4.5.2026
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி, முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார். 2011-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசில் இருந்து பிரிந்து, தனியாக அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியை அவர் உருவாக்கினார்.

2021-ம் ஆண்டு மே மாதம் முதல், முதல்-மந்திரியாக பதவி வகித்து வரும் ரங்கசாமி பலமுறை முதல்-மந்திரி பதவியை வகித்திருக்கிறார். முதலில், 2001 முதல் 2008 ஆண்டு வரையிலும், பின்னர் 2011 முதல் 2016 வரையிலும் அவர் முதல்-மந்திரியாக இருந்திருக்கிறார்.

ஜூன் 15-ந்தேதி உடன் தற்போது நடைபெற்று வரும் அவருடைய ஆட்சியின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு கடந்த ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்டத்தில் சட்டசபை தேர்தல் பலத்த பாதுகாப்புடன், வன்முறை எதுவுமின்றி நடத்தி முடிக்கப்பட்டது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி தொடங்கி நடந்து வருகிறது.

இதில், புதுச்சேரியில் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் முதல்-மந்திரியான ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதியில் 4,441 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். முதல்-மந்திரி ரங்கசாமி 10,024 வாக்குகள் பெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நேயம் மக்கள் கழகம் வேட்பாளர் விநாயகம் 5,583 வாக்குகள் பெற்று 2-ம் இடத்தில் உள்ளார்.

சுயேச்சை வேட்பாளரான சேது (சேதுசெல்வம்) 3,984 வாக்குகள் பெற்று 6,040 வாக்குகள் பின்தங்கி உள்ளார். இந்திய தேசிய காங்கிரசை சேர்ந்த பழம்பெரும் தலைவரான வைத்திலிங்கம் 2,990 வாக்குகள் பெற்றுள்ளார். அவர் 7,034 வாக்குகள் பின்தங்கி உள்ளார்.

இந்த சூழலில், இன்றிரவு 7 மணியளவில் முதல்-மந்திரி ரங்கசாமி செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், எங்களுடைய கூட்டணி 17 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. என்.ஆர். காங்கிரஸ் – 12, பா.ஜ.க. – 4, அ.தி.மு.க. – 1 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. அதனால், புதுச்சேரியில் நாங்கள் மீண்டும் ஆட்சி அமைப்போம் என கூறியுள்ளார்.

அவர், தட்டாஞ்சாவடி மற்றும் மங்களம் என 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தட்டாஞ்சாவடி தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார். இந்த முறையும் அந்த தொகுதியை கைப்பற்றி வெற்றியை தக்க வைத்து கொண்டார். அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்டார்.

இதுதவிர, தேர்தலில் தி.மு.க. (5), த.வெ.க. (2), காங்கிரஸ் (1), லட்சிய ஜனநாயக கட்சி (1), நேயம் மக்கள் கழகம் (1), மற்றவை (3) ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *