June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

கம்யூனிஸ்டு கட்சிகளின் மாநில தலைவர்களுடன் சி.டி.ஆர்.நிர்மல்குமார் சந்திப்பு

1 min read

CTR Nirmal Kumar meets with state leaders of communist parties

7.5.2026
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற கட்சிகள் த.வெ.க.வுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை.

முன்னதாக, த.வெ.க. தலைவர் விஜய், நேற்று மாலை தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகரை சந்தித்தார். அப்போது தங்களை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி கவர்னரிடம் கடிதம் வழங்கினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் விஜய்க்கு இல்லாததால், அவரை ஆட்சியமைக்க வரும்படி கவர்னர் அழைக்கவில்லை.

இதனிடையே தி.மு.க. கூட்டணியில் உள்ள வி.சி.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் த.வெ.க. ஆட்சியமைக்க ஆதரவு வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் ஆகியோரை த.வெ.க. இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் சந்தித்து பேசினார்.

இதனிடையே, சி.டி.ஆர்.நிர்மல்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
“த.வெ.க.வுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. இந்த தேர்தல் இதுவரை யாரும் பார்க்காத ஒரு தேர்தலாக இருந்தது. மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்திருக்கிறார்கள்.

த.வெ.க.வை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என கவர்னரிடம் மனு கொடுத்துள்ளோம். தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள த.வெ.க. கட்சிக்கு தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு சட்டப்படி கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும். கவர்னர் முடிவைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்க வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐ.யூ.எம்.எல். கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். பேச்சுவார்த்தை நடத்தி முடிவை தெரிவிப்பதாக கூறியுள்ளனர். த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என முதல் மாநாட்டிலேயே த.வெ.க. தலைவர் விஜய் கூறியிருந்தார்.

ஒவ்வொரு கட்சியும் மக்களிடம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு இருந்தால்தான் அவர்களின் கொள்கைப்படி மக்கள் பணிகளை அவர்களால் செய்ய முடியும். த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்க தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *