மேற்கு வங்காள முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு
1 min read
Suvendu Adhikari sworn in as West Bengal Chief Minister
9.5.2026
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றியது. இதனை அடுத்து மேற்கு வங்காள முதல்-மந்திரியாக சுவேந்து அதிகாரி இன்று காலை பதவியேற்றுக்கொண்டார்.
அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.சுவேந்து அதிகாரியுடன் மேலும் 5 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர். பா.ஜ.க. மூத்த தலைவரும், மாநில முன்னாள் தலைவருமான திலீப் கோஷ், அக்னிமித்ரா பால், அசோக் கீர்த்தனியா, நிஷித் பிராமணிக், குசுதிராம் டுடு ஆகியோரும் பதவியேற்றனர். அவர்களுக்கு கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
முதல்-மந்திரியாக பதவியேற்ற சுவேந்து அதிகாரி, மோடியின் காலில் விழுந்து வாழ்த்து பெற்றார். அவரை மோடி கட்டியணைத்து முதுகில் தட்டிக்கொடுத்தார்.
பதவியேற்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி கூறியதாவது:-
இந்த நாள் நாட்டுக்கும் மேற்கு வங்காளத்திற்கு மிகவும் முக்கியமான நாள். ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாளான இன்று, புதிய அரசு பதவியேற்க வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்பினார். அதன் காரணமாக, பிரதமர் மோடியின் தலைமையில் ரவீந்திரநாத் தாகூருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பதவியேற்பு விழா நடத்தப்பட்டது. ஜோராசங்காவில் உள்ள ரவீந்திரநாத் தாகூர் பிறந்த இல்லத்துக்குச் சென்று வணங்கிய பிறகே நான் எனது முதல்வர் பணிகளை தொடங்க உள்ளேன்.
டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிக்கு வேறு எந்தச் சான்றிதழும் தேவையில்லை. நான் இப்போது முதல் மந்திரியாக இருக்கிறேன். நான் அனைவருக்கும் பொதுவானவன். தேர்தல் முடிவுகளைப் பற்றியே இன்னும் விவாதித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல புத்தி கிடைக்கட்டும்”
இவ்வாறு அவர் கூறினார்.