June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூலிப்பது ஏன்?

1 min read


Why do Tasmac stores charge an extra Rs. 10 per bottle of liquor?

19.5.2026
தமிழகத்தில் கடந்த கால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளில் டாஸ்மாக் மதுக் கடைகளில், மது பாட்டிலில் குறிப்பிட்ட விலையைவிட கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அது புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு காலத்திலும் தொடர்வதாக மதுப்பிரியர்கள் கவலை தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், மது பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலித்தால், டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதற்கிடையே, நாங்கள் ஏன் மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கிறோம் என்று டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவர் பட்டியல் போட்டு வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. அந்த பட்டியலில், நாள் ஒன்றுக்கு ரூ.3 லட்சம் மது விற்பனை நடைபெறும் டாஸ்மாக் கடையின் செலவுகள் என்னென்ன என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, காலி பாட்டில்களை சேகரிக்க வருபவருக்கு ரூ.800, மது பாட்டிலில் ஸ்டிக்கர் ஒட்ட வருபவருக்கு ரூ.800, காலிபாட்டில ரூபாய் தாள் கமிஷன் 10 சதவீதப்படி, ரூ.2,500, மதுக்கூட வாடகை ஒப்பந்ததாரருக்கு ரூ.1,000, மதுபான பாட்டில் உடைந்து போவதற்கு ரூ.1000, மின் கட்டணம் (டாஸ்மாக் நிர்வாகம் வழங்குவதை தவிர்த்து) ரூ.200, அலுவலகம் சென்று வருவதற்கு ரூ.200, வங்கியில் பணம் கட்ட செல்லும் செலவு ரூ.200, இன்டர்நெட் வசதி பெற ரூ.200, சுகாதார செலவுக்கு ரூ.200, பாதுகாப்பு செலவு ரூ.500, மதுபானங்கள் இனாம் செலவு ரூ.500, தண்ணீர் கேன் செலவு ரூ.60 என மொத்தம் ரூ.8160 செலவு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஒரு மாதத்திற்கு கணக்கிடும்போது ரூ.2 லட்சத்து 44 ஆயிரத்து 800 செலவு ஏற்படுகிறது.

அதேபோல், மாதா மாதம் கையூட்டு செலவு விவரமும் அடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், மாவட்ட மேலாளருக்கு ரூ.10 ஆயிரம், உதவி மேலாளருக்கு ரூ.2 ஆயிரம், அலுவலக பணியாளர்களுக்கு (எண்ணிக்கைக்கு ஏற்ப) ரூ.10 ஆயிரம், கலால் (வருவாய் ஆய்வாளர், துணை கமிஷனர்) ரூ.5 ஆயிரம், கலால் (உதவி கமிஷனர்) ரூ.5 ஆயிரம், கட்டிட உரிமையாளருக்கு வாடகை ரூ.60 ஆயிரம், மதுபானம் இறக்கு கூலி (பெட்டி ஒன்றுக்கு ரூ.5 வீதம்) ரூ.15 ஆயிரம், முதுநிலை மண்டல மேலாளர் ரூ.5 ஆயிரம், அரசியல் நன்கொடை ரூ.5 ஆயிரம், காலி பாட்டில் ஒப்பந்ததாரர் ரூ.3 ஆயிரம், மீடியா ரூ.3 ஆயிரம், இதர செலவுகள் ரூ.10 ஆயிரம் என ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் செலவு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், நாள் ஒன்றுக்கு ரூ.3 லட்சத்திற்கு மது விற்பனையாகும் ஒரு டாஸ்மாக் கடையில், மாதச் செலவு ரூ.3 லட்சத்து 77 ஆயிரத்து 800 ஏற்படுவதாக தெரிகிறது. எனவே, தமிழக அரசு இந்த பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்பது டாஸ்மாக் கடை ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *