சந்திரயான்-3 ஆய்வில் நிலவின் மேற்பகுதி ‘கேக்’ போன்ற 2 அடுக்கு வடிவம்
1 min read
Chandrayaan-3 study reveals two-layered ‘cake’-like surface of the moon
21.6.2026
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சந்திரயான்-3 விண்கலத்தின் ஆய்வுகள் மூலம் நிலவின் மேற்பரப்பு பற்றிய புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. நிலவின் மேற்பகுதி ஒரே சீரான தூசி குவியலாக இல்லாமல், இரண்டு அடுக்குகளைக் கொண்ட ‘கேக்’ போன்ற அமைப்பில் உள்ளது. இதில் மேல் அடுக்கு சில சென்டிமீட்டர் ஆழம் மட்டுமே கொண்டது. நிலவின் மேலோடு உருவானதில் இருந்தே, விண்கற்கள் தொடர்ந்து அதன் மீது மோதி நசுக்கியதால் இந்த அடுக்குகள் உருவாகி உள்ளன.
அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வக (பி.ஆர்.எல்) விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இதற்காக, கடந்த 2023 செப்டம்பர் 2-ந்தேதி சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் லேசாக எழும்பி, மீண்டும் தரை இறங்கிய (ஹாப் சோதனை) இடத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
விக்ரம் லேண்டரின் என்ஜின்கள் மீண்டும் இயக்கப்பட்டபோது, அதிலிருந்து வெளியேறிய பலத்த காற்று, ஒரு ஊதுகுழல் போல செயல்பட்டு நிலவின் மேற்பகுதியில் இருந்த 3 சென்டிமீட்டர் தளர்வான தூசிகளை அகற்றியது. இதன் மூலம் அதன் அடியில் பலகாலமாக அழுத்தப்பட்டு மிகவும் நெருக்கமாக இருந்த பழமையான பகுதி வெளியே தெரிந்தது. நிலவின் மேற்புற தூசி மிகவும் லேசானது. ஆனால், வெறும் 6.5 சென்டிமீட்டர் ஆழத்தில் அதன் அடர்த்தி இரண்டு மடங்காகவும், பிணைப்புத் திறன் ஐந்து மடங்காகவும் அதிகரிக்கிறது.
விண்வெளி வீரர்கள் நிலவில் நடக்கும்போது அதன் மேற்பகுதி காய்ந்த மாவில் நடப்பது போன்ற உணர்வைத் தரும். ஆனால், சில சென்டிமீட்டர்கள் ஆழத்திற்குச் சென்றால் அது ஈரமான, கடினமான களிமண் போல மாறும். நிலவின் தென்துருவப் பகுதியில் எதிர்கால விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்வதற்கும். அங்கு அறிவியல் ஆராய்ச்சி முகாம்களை அமைப்பதற்கும் இந்த புதிய கண்டுபிடிப்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. விண்வெளி ஆய்வில் இதுபோன்ற தனித்துவமான அளவீடு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.