June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

மேகதாது அணை விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு

1 min read

Chief Minister Vijay orders legal action in Mekedatu Dam issue

25.5.2026
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசால் பூமிபூஜை நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது குறித்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் விரிவாக ஆலோசனை மேற்கொண்டு, தொடர் சட்ட நடவடிக்கைகள் விரைவாக எடுத்திட அறிவுறுத்தினார்கள்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில், கர்நாடக அரசால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை தொடர்பாக உத்தேசிக்கப்பட்டுள்ள பூமிபூஜை நிகழ்வினை தொடர்ந்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே உத்தேசிக்கப்பட்டுள்ள மேகதாது அணையானது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பிற்கு எதிரானது என்பதால், இத்திட்டத்தை எதிர்த்து 30.11.2018 மற்றும் 7.6.2022 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசால் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், மேகதாது அணையுடன் தொடர்புடைய இவ்வழக்கில் 13.11.2025 அன்று விசாரித்த மாண்பமை சுப்ரீம் கோர்ட்டில் மேகதாது அணை திட்டத்திற்கு எவ்வித அனுமதியையும் அளிக்கவில்லை என்றும், இத்திட்டம் தொடக்கநிலையில் தான் உள்ளது என்றும், இத்திட்டம் மாண்பமை சுப்ரீம் கோர்ட்டில் முந்தைய தீர்ப்பிற்கு உட்பட்டதா இல்லையா என்பதை நிபுணர்கள் அடங்கிய மத்திய நீர்வளக் குழுமம் தான் தீர்மானிக்க முடியும் என்று தெரிவித்து, இவ்வழக்குகளை முடித்து வைப்பதாக உத்தரவிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

மாண்பமை சுப்ரீம் கோர்ட்டில் 13.11.2025 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து, தமிழ்நாடு அரசால் சீராய்வு மனு 11.12.2025 தேதியில் தாக்கல் செய்யப்பட்டது. அச்சீராய்வு மனுவானது முந்தைய ஆட்சிக்காலத்தில் மாண்பமை சுப்ரீம் கோர்ட்டில் உள்விசாரணை நடைபெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு தற்சமயம் மாண்பமை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்யப்பட்டது. மேற்கண்ட தீர்ப்பு விவரங்களைக் கருத்தில் கொண்டு விரிவான சட்ட ஆலோசனைக்குப்பின் உடனடியாக எடுக்க வேண்டிய தொடர் சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், நீர்வளத் துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு, பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சட்டத்துறை செயலாளர் எஸ். ஜார்ஜ் அலெக்சாண்டர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி வாயிலாக மூத்த வழக்கறிஞர் ஜி. உமாபதி, காவிரி தொழில்நுட்ப குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர் பிரிவின் தலைவர் ஆர். சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *