தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்
1 min read
Mahesh Kumar Agarwal appointed as new DGP of Tamil Nadu
29.5.2026
தமிழக சட்டசபை தேர்தல், கடந்த ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் நடத்தப்பட்டது. இதனை முன்னிட்டு தேர்தல் ஆணைய உத்தரவின்படி, பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. இதன்படி, தமிழகத்திற்கான பொறுப்பு டி.ஜி.பி.யாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டார்.
இந்த சூழலில், தேர்தல் முடிந்து த.வெ.க. தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்று உள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. பதவிக்காக ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் மகேஷ் குமார் அகர்வால் ஆகிய 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கான பட்டியல் யு.பி.எஸ்.சி.க்கு அனுப்பப்பட்டது.
இது தொடர்பாக டெல்லியில் நடந்த கூட்டத்தில் இந்த 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யு.பி.எஸ்.சி. ஒப்புதல் அளித்தது. அவர்கள் 3 பேரில் ஒருவர் விரைவில் டி.ஜி.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. யார் என்பது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காவல்துறையில் மிக உயரிய பதவியாக விளங்கும் தமிழக டிஜிபி பதவிக்கு ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ்குமார் தற்போதைய டிஜிபி சந்தீப் ராய் ரதோருக்கு புதிலாக புதிய டிஜிபியாக மகேஸ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
1994-ம் ஆண்டு பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால். சிபிஐ, சிபிசிஐடி உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளில் இருந்தவர். தற்போது புதுடெல்லியில் எல்லை பாதுகாப்பு படை டிஜிபியாக பணியாற்றி வருகிறார் மகேஷ் குமார் அகர்வால்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ். இவருடைய தந்தை வழக்கறிஞர் என்பதால் சட்டம் படித்துவிட்டு, காவல்துறையில் நுழைந்தவர். தன்னுடைய 22வது வயதில் (1994) சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று ஐபிஎஸ் அதிகாரியாக தனது பணியை தொடங்கினார். பிறகு,பல்வேறு முக்கிய காவல்துறை பொறுப்புகளில் பணியாற்றி இருக்கிறார்.
குறிப்பாக, சேலத்தில் இருந்து சென்னை வந்த ரெயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் இவர் தலைமையிலான சிபிசிஐடி தான் கொள்ளையர்களை கைது செய்தது. மேலும், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலைய குண்டுவெடிப்பு, சென்னை பெண் என்ஜினியர் உமா மகேஸ்வரி கொலை போன்ற வழக்குகளில் திறம்பட விசாரணை நடத்தி இருக்கிறார்.