பெரம்பலூர் அருகே கார்-லாரி மோதி விபத்து: 3 பேர் பலி
1 min read
Car-Lorry Collision Near Perambalur: 3 Killed
15.6.2026
சென்னை பெரம்பூர் அருகே உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் சங்கர் (37). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவருடன் அரியலூர் மாவட்டம் அரிசானத்தம் கிராமத்தை சேர்ந்த விஜய் (30), சன்னாநல்லூர் கிராமத்தை சேர்ந்த சக்தி (21) ஆகியோரும் என்ஜினீயர்களாக பணியாற்றி வந்தனர்.
இந்தநிலையில் வேலை காராணமாக 3பேரும் கேரளாவிற்கு பயணம் சென்றனர். பணிகள் முடிந்து இரவு ஊர் திரும்பிய நிலையில் விஜய், சக்தி ஆகியோர் தங்களது சொந்த ஊரான அரியலூர் சென்று விட்டு அங்கிருந்து சென்னை செல்ல திட்ட மிட்டனர். இதனை தொடர்ந்து 3பேரும் கேரளாவில் இருந்து அரியலூருக்கு காரில் புறப்பட்டனர்.
இன்று அதிகாலை பெரம்பலூர் மாவட்டம் துறையூர் சாலையில் டி. களத்தூர் கிராமம் தனியார் பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து துறையூர் நோக்கி கனரக லாரி வந்து கொண்டிருந்தது. அதனை தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த டிரைவர் ஜலீல் பாஷா ஷேக் ஓட்டி வந்தார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதின. இதில் கார் முற்றிலும் நொறுங்கியது. காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் விரைந்து வந்த காவல் துறையினர் உடல்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை தொடர்ந்து அந்த நெடுஞ்சாலை பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் வாகனங்களை அந்த இடத்தில் இருந்து அகற்றினர்.
இதனால் அங்கு போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.