June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது – ஐகோர்ட்டில் அ.தி.மு.க. வழக்கு

1 min read

AIADMK files case in High Court against holding by-elections for four constituencies in Tamil Nadu.

15.6.2026
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளது.

இந்த நிலையில் சட்டசபை யில் கடந்த மாதம் 13-ந்தேதி ஆளும் த.வெ.க.வுக்கு ஆதர வாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 25 பேர் த.வெ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதையடுத்து அவர்களுக்கு எதிராக கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க கோரி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபா கரிடம் மனு அளித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் மதுராந்தகம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மரகதம் குமர வேல், பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்தியபாமா ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்தனர்.

அவர்களின் ராஜினாமா கடிதங்களை அன்றைய தினமே சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ஏற்றுக் கொண்டார். இதுகுறித்த அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இதன் பின்னர் அம்பாசமுத்திரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா தனியாக ராஜினாமா செய்தார். அதனையும் சபா நாயகர் அன்றே ஏற்றுக் கொண்டார்.

தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தபோது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் அதன் தலைவர் எம்.எல்.ரவி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

சட்டசபையில் கொறடா உத்தரவை மீறி வாக்களித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளபோது, அதனை தவிர்க்கும் வகையில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததை ஏற்க முடியுமா என்ற அரசியல் சாசன கேள்வி எழுந்துள்ளது.
தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ளபோது, எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்றுக் கொண்டது, கட்சித் தாவல் தடை சட்டத்தையும், மக்கள் தீர்ப்பையும் நீர்த்து போக செய்யும் வகையில் உள்ளது. எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா மற்றும் கட்சித்தாவல் காரணமாக அடுத்தடுத்து தேர்தல் நடத்த வேண்டியுள்ளதால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது.

அ.தி.மு.க.வில் இருந்த எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அவர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனுக்களை விசாரித்து முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள் முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அ.தி.மு.க. கொறடா அக்ரி கிருஷ்ண மூர்த்தி சார்பில் மூத்த வக்கீல் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, ‘இந்த வழக்கில் தங்களையும் இணைக்க வேண்டும். 4 அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்று அந்த தொகுதிகள் காலியானதாக வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.
இந்த வழக்கு விசாரணை முடிந்து, முடிவு வரும் வரை சம்பந்தப்பட்ட அந்த 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்துள்ளோம். அந்த வழக்கு இன்னும் எண் இடப்படவில்லை. எனவே வழக்கு எண்ணிட்ட பிறகு அதனையும் சேர்த்து நாளை அல்லது நாளை மறுநாள் விசாரிக்க வேண்டும்’ என தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *