ராணுவத்தை வலுப்படுத்த ரூ.52 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் கொள்முதல்
1 min read
Arms worth Rs 52,000 crore to be procured to strengthen the military
4.7.2026
நாட்டின் முப்படைகளின் ராணுவ வலிமையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரூ.52 ஆயிரம் கோடி மதிப்பிலான நவீன ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் கவுன் சில் கூட்டம் நடைபெற்றது. இதில் முப்படைகளின் தேவைகளை கருத்தில் கொண்டு பல்வேறு நவீன ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சுமார் ரூ.52 ஆயிரம் கோடி மதிப்பிலான கொள்முதல் திட்டங்களுக்கு கொள்கை ரீதியான ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த ஒப்புதலுக்குப் பிறகு. சம்பந்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட உள்ளன. அதில் இந்திய ராணுவத்துக்காக ஆளில்லா விமானங்களின் தாக்குதல்களை முறியடிக்கும் மின்னணு போர் அமைப்பான ‘ஆகாஷ் தரங்’ உள்ளிட்டவற்றை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படைக்காக பல்முனை தாக்குதல் தரைக்கண்ணி, கப்பலில் இருந்து இயக்கப்படும் ஆளில்லா வான்வழி அமைப்பு மற்றும் மின் உந்துவிசை அமைப்புக்கான தரைவழி சோதனை வசதியை உருவாக்கவும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல் மின் உந்துவிசை அமைப்புக்கான தரைவழி சோதனை மையம் அமைக்கப்படுவதன் மூலம், கடற்படையின் மோட்டார்கள் மற்றும் உந்துவிசை அமைப்புகளை சோதித்து பராமரிக்கும் வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.
இந்திய விமானப்படைக்காக நிலையான இறக்கை கொண்ட உயரமான போலி செயற்கைக்கோள் மற்றும் பிற திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த போலி செயற்கைக்கோள் அமைப்பு, நீண்ட நேரம் வானில் இருந்து உளவு, கண்காணிப்பு, உளவுத்தகவல் சேகரிப்பு, தொலைத்தொடர்பு மற்றும் தொலை உணர்வு பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டதாக இருக்கும். இதன் மூலம் விமானப்படையின் கண்காணிப்பு திறன் மேலும் வலுப்பெறும் என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கண்ட இந்த முடிவுகள் இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் தாக்கு தல் மற்றும் தற்காப்பு திறனை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.