July 4, 2026

Seithi Saral

Tamil News Channel

பத்ரிநாத் கோவிலிலும் நன்கொடை திருட்டா?

1 min read


Donation theft at Badrinath Temple too?

4/7/2026
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலில் நன்கொடை திருடப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பத்ரிநாத் கோவிலிலும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், விசாரணைக்கு கேதர்நாத்- பத்ரிநாத் கோவில் அறக்கட்டளை உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலுக்கு, பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தொகையில் இருந்து கோடிக்கணக்கில் பணம் சுருட்டப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் இதுவரை எட்டு பேரை கைது செய்துள்ளனர்.

இந்த முறைகேடுகளுக்கு தார்மிக பொறுப்பேற்று, ராம ஜென்ம பூமி ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்த சம்பத் ராயிடமும், போலீசார் விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான லவ்குஷ் மிஸ்ரா வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். கைதான எட்டு பேரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை 77.85 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 11 கிராம் தங்கம், 375 கிராம் வெள்ளி, இந்திய மதிப்பில் ஒரு லட்சம் ரூபாய்க்கான அமெரிக்க டாலர்களும் சோதனையில் சிக்கியுள்ளன.

கைதான அவினாஷ் சுக்லா, கடந்த 10 ஆண்டுகளாக தங்கி இருந்த யோகா மையத்தில் இருந்து, ராமராஜ்யா கோஷ் என்ற பெயரில், க்யூ.ஆர்., குறியீட்டுடன் வைக்கப்பட்டிருந்த நன்கொடை பெட்டியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கோவில் வளாகத்தில் பணியாற்றும் 400 தனியார் செக்யூரிட்டிகளின் பங்களிப்பு குறித்தும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதற்கிடையே, கைதான அவினாஷ் சுக்லா, கண்காணிப்பு கேமராக்கள் குறைபாடுகளை பயன்படுத்தி, காணிக்கை எண்ணும் அறையில் இருந்து பணத்தை கட்டுக்கட்டாக திருடி, கோவிலுக்குள் இருக்கும் கழிப்பறையில் வைத்துவிட்டு, பின்னர் சிறிது, சிறிதாக அதை வெளியே எடுத்துச் சென்றதாக தெரிவித்து உள்ளார்.

இதில், பலருக்கும் பங்கு இருப்பதாக அவர் கூறியதால், விசாரணை தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். இது முக்கிய குற்றவாளிகளை விடுவிப்பதற்கான முயற்சி என எதிர்க்கட்சிகள் குற்றாம்சாட்டியுள்ளன.
இந்த நிலையில் புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில் நன்கொடைகளும் திருடப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி தீயாக பரவியது. இந்த நிலையில் பத்ரிநாத்- கேதர்நாத் கோவில் கமிட்டி (BKTC) சார்பில் விசாரணை கமிட்டி அமைத்து இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை பத்ரிநாத்- கேதர்நாத் கோவில் கமிட்டி தலைவர் ஹேமந்த் திவேதி தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும். ஊழியர்களிடம் இருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றார்.

அதோடு, சமூக வலைத்தளத்தில் ஒரு குறிப்பிட்ட ஊழியர், இவருடைய தனிப்பட்ட செயலாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை திவேதி மறுத்துள்ளார். அந்த நபர் தன்னுடைய தனிப்பட்ட செயலாளர் அல்ல. அறக்கட்டளையின் நிரந்தர ஊழியர். இந்த கமிட்டியின் முந்தைய தலைவரக்ளுடன் தனிப்பட்ட உதவியாளராக அவர் பணியாற்றியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைக்குப் பிறகு எந்தவொரு ஊழியரும் குற்றவாளி என்று கண்டறியப்பட்டால், விதிப்படி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ள கேத்ரிநாத் கோவில் குளிர் காலத்தில் மூடப்படும். கோடைக்காலத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் மாதம் திறக்கப்பட்ட கோவில் நவம்பர் மாதம் வாக்கில் மூடப்படும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *