ஆதவ்அர்ஜுனா மீதான வழக்கு: திமுக கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுப்பு- மனு வாபஸ்
1 min read
Case against Aadhav Arjuna: Judges refuse to accept DMK’s request – Petition withdrawn
7.7.2026
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வக்கீல் அனுராதா அற்புதம் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் பேசிய பேச்சு வழக்கின் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை பாதிக்கும் நோக்கத்துடன் இருப்பதாக உள்ளது. எனவே, அவர் மீது உரிய புகாரை பதிவு செய்து விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும்.
சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வருகிற 10-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய் கரூர் செல்ல இருப்பதாகவும், அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் சி.பி.ஐ. விசாரணையை பாதிக்கக்கூடும் என்பதால், இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு முன்பு சி.பி.ஐ.யின் அனுமதி பெறும் வகையில் உரிய வழி காட்டுதல்களை சுப்ரீம் கோர்ட்டு வகுக்க வேண்டும்.
அத்துடன், சி.பி.ஐ. விசாரணை நிறைவடையும் வரை கரூர் கூட்ட நெரிசல் வழக்கு குறித்து முதல்-அமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோர் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் விஸ்வநாதன், ஆலோக் ஆராதே தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில் ஆஜரான வக்கீல், ‘கரூர் வழக்கில் முதல்-அமைச்சர் விஜய் குற்றம் சாட்டபட்டவர். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு சிபிஐ விசாரணையை திசை திருப்பும் வகையில் உள்ளது என வாதிட்டார்.
அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள், திமுக ஆட்சியில் பதிவான வழக்கில் விஜய் குற்றம்சாட்டப்பட்ட நபராக சேர்க்கப்படவில்லை என்று கூறினர். தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்றாதீர்கள். உங்கள் சண்டைகளை நீதிமன்றத்துக்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் குற்றச்சாட்டு முனவைத்தால் பதிலுக்கு திமுக தரப்பும் பேசிக்கொள்ளுங்கள். முதல்-அமைச்சருக்கு நிர்வாக ரீதியிலான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?. உதவிகள் வழங்குவது எப்படி சாட்சியங்களை கலைப்பதாகும்?.
முதல்-அமைச்சர் விஜய் கரூர் செல்ல தடையில்லை. முதல்-அமைச்சரின் பேச்சு கருத்து சுதந்திரம். முதல்-அமைச்சரின் பேச்சை உச்ச நீதிமன்றம் கட்டுப்படுத்த வேண்டும் என விரும்புகிறீர்களா?. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்குவது எப்படி விசாரணையை பாதிக்கும்?. கருத்து சுதந்திரத்துக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதிபகள் கூறினர். மேலும் தயவுசெய்து ஆவணங்களை சரியாக படித்து பார்த்துவிட்டு நீதிமன்றத்தில் பேசுங்கள் என திமுக வழக்கறிஞருக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.
இறுதியில், கரூர் வழக்கில் திமுகவின் கோரிக்கை ஏற்க மறுத்த நீதிபதிகள், இடையீட்டு மனுவை வாபஸ் பெறுகிறீர்களா அல்லது தள்ளுபடி செய்யவா? என கேள்வி எழுப்பினர். இதனையடுத்து மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக திமுக தெரிவித்ததை அடுத்து மனுவை தள்ளுபடி செய்தி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.