July 7, 2026

Seithi Saral

Tamil News Channel

சீனாவின் சதி: வங்காளத்தின் தீஸ்தா நதி திட்டத்தால் இந்தியாவுக்கு நெருக்கடி

1 min read

China’s Plot: Crisis for India Due to Bengal’s Teesta River Project

7/7/2026
இந்தியாவின் எல்லையோரப் பாதுகாப்புக்கு மிக முக்கியமான சிலிகுரி காரிடார் எனப்படும் ‘சிக்கன்ஸ் நெக்’ பகுதிக்கு மிக அருகில், வங்காளதேசத்தின் ‘தீஸ்தா நதி மேலாண்மை திட்டத்தை’ அதிவேகமாகச் செயல்படுத்த சீனாவும் வங்காளதேசமும் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்துள்ளன.

வங்காளதேசத்தின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் அண்மையில் சீனாவுக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின்போது இதற்கான சாத்தியக்கூறு ஆய்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது இந்திய பாதுகாப்பு வட்டாரங்களில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வங்காளதேசத்தின் வடக்குப் பகுதியில் பாயும் தீஸ்தா நதியின் சுற்றுச்சூழல் மற்றும் வெள்ள மேலாண்மையை மேம்படுத்த சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பில் ‘தீஸ்தா நதி விரிவான மேலாண்மை மற்றும் மறுசீரமைப்பு திட்டம்’ உருவாக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ்,100 கிலோமீட்டருக்கும் அதிகமான நதிப்பகுதி தூர்வாரப்படும். நதியின் கரைகள் பலப்படுத்தப்பட்டு, 171 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான நிலம் மீட்டெடுக்கப்படும். மீட்டெடுக்கப்படும் நிலப்பரப்பில் புதிய நகரங்கள், சாலைகள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சீன நிதியுதவியுடன் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்து.

இந்தத் திட்டத்தை முன்னெடுக்க சீன அரசு பல ஆண்டுகளாகவே வங்காளதேசத்தை வற்புறுத்தி வந்தது. ஆனால், இந்தியாவின் பாதுகாப்பு நலன்களைக் கருத்தில் கொண்டும், இந்தியாவின் அண்டை நாட்டு நட்புறவை மதித்தும், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு இந்த திட்டத்திற்குப் இறுதி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்தது.

ஆனால், வங்காளதேசத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி அரசு, இந்தியாவின் கவலைகளைப் புறந்தள்ளிவிட்டு இத்திட்டத்தை சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தின் கீழ் வேகமாகச் செயல்படுத்த சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் கைகோர்த்துள்ளது.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதி, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் குறுகிய நிலப்பகுதியான ‘சிலிகுரி காரிடார்’ (சிலிகுரி கணவாய் – 22 கி.மீ அகலம் கொண்ட இந்தியாவின் மிக முக்கியமான மூலோபாயப் பகுதி) அருகே அமைந்துள்ளது.

தீஸ்தா நதி திட்டத்தை செயல்படுத்தும் ‘பவர் சீனா’ நிறுவனம், சீனாவின் அரசுக்குச் சொந்தமான ராணுவப் பின்னணி கொண்ட நிறுவனமாகும். நதி மேலாண்மை என்ற பெயரில், இந்திய எல்லைக்கு மிக அருகில் சீன பொறியாளர்களும் ராணுவ தொழில்நுட்ப வல்லுநர்களும் பல ஆண்டுகள் முகாமிட்டிருக்க இத்திட்டம் வழிவகுக்கும். இது இந்தியாவின் எல்லையோரப் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாகும்.

கடந்த 2024-ஆம் ஆண்டிலேயே, சீனாவை இத்திட்டத்திலிருந்து விலக்கி வைப்பதற்காக, இத்திட்டத்திற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதியுதவிகளை இந்தியாவே வழங்குவதாக டெல்லி முன்வந்தது. இருப்பினும் வங்காளதேசம் தற்போது சீனாவைத் தேர்ந்தெடுத்துள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் விடுத்துள்ள அறிக்கையில், “வங்காளதேசத்திற்கான இந்தியாவின் வளர்ச்சி உதவிகள் இருதரப்பு உடன்பாட்டின்படி தொடர்ந்து மறுஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
தீஸ்தா நதி விவகாரத்தில் அண்மையில் நடந்துள்ள அனைத்து மாற்றங்களையும் இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. வரும் நாட்களில் எங்களின் ஒட்டுமொத்த அணுகுமுறையிலும் இந்த நகர்வுகள் கணக்கில் கொள்ளப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *