என் மனதின் ஆறாத காயம் கரூர் சம்பவம்: முதல்-அமைச்சர் விஜய் பேச்சு
1 min read
The Karur incident is an unhealed wound in my heart: Chief Minister Vijay.
10.7.2026
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி கரூரில் நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்துபோனார்கள். இது தொடர்பாக, சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சமும், த.வெ.க. சார்பில் தலா ரூ.20 லட்சமும் இழப்பீடு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதற்காக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று கரூர் வந்தார். இதற்கிடையே, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கக்கூடாது என்று ஐகோர்ட்டு மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையும் இன்று நடைபெற்றது. அவர்களுக்கு தற்காலிக பணி வழங்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், கரூரில் உள்ள அட்லஸ் அரங்கத்தில் நிகழ்ச்சி தொடங்கியது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து கரூருக்கு காரில் வருகை தந்த முதல்-அமைச்சர் விஜய்க்கு வழிநெடுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். நிகழ்ச்சியில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 32 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு, அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ற வேலைக்கான பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
என் நெஞ்சில் குடியிருக்கும் கரூர் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்… ஒரு மனிதன் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் மனதளவில் காயங்கள், வலிகளை மறக்க முடியாது. நிறைய வலிகள், காயங்களை தாண்டித்தான் வந்தேன். கரூர் சம்பவம்தான் எனக்கு அதிக மனவலியை கொடுத்தது. என் அக்கா தங்கைகளை கரூரில் இழந்தேன்… கள்ளங்கபடமற்ற குழந்தைகளை இழந்தேன். என் மனதின் ஆறாத காயம் கரூர் சம்பவம்.
பெரம்பலூர் செல்லும் முன் கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்கு செல்ல வேண்டாம் என போலீஸ் கூறியது; நாமக்கல்லில் இருந்து கரூர் வந்தபோது அங்கிருந்த காவல் துறை எங்களை அலர்ட் செய்யாதது ஏன்?. நெடுஞ்சாலையில் இருந்து எங்களை சம்பவ இடத்துக்கு அழைத்து வந்து விட்டது போலீஸ்தான்; இப்படி நடந்தால் அப்படி செய்யுங்கள், அப்படி நடந்தால் இப்படி செய்யுங்கள் எனச்சொல்லி பிரஷர் போட்டது யார்?.
போலீஸ் நினைத்திருந்தால் கரூர் நிகழ்ச்சியையே கேன்சல் பண்ணியிருக்கலாம். ஆனால், அந்த போலீஸே எங்களை ஹைவேஸ்ல இருந்து அந்த இடத்துக்கு கூட்டிட்டு போன நாடகம் இருக்கு பாருங்க. அதை நான் நம்பிட்டேன். அதனால்தான் கூட்டத்தில் போலீஸுக்கு நன்றி எல்லாம் சொன்னேன்”
“வலியோடு இருந்த என்னை ஓடி ஒளிந்துவிட்டேன் என என்னைக் கூறுவதா?. பணமா? ஜனமா? என என்னைக் கேட்டால், ஜனம்தான் முக்கியம் என நான் கூறுவேன். அதை விட எனக்கு வேறு எதுவும் முக்கியமில்லை. நம்ம எல்லோருக்கும் இத்தனை வலிகள், காயங்கள் கொடுத்தவர்களுக்கு 2026 தேர்தலில் தக்க பதிலடி கொடுத்துவிட்டீர்கள்; ஆனால், அது மட்டும் போதாது மக்களே… எழுந்திருக்கவே முடியாத அளவிற்கு நிரந்தரமான பதிலடி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பைசா லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை; தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு அலுவலகங்களில் வேலை டக் டக் என நடக்கிறது; தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு அலுவலகங்களில் மக்களுக்கு மரியாதை கிடைக்கிறது; ஊழல், லஞ்சம் இல்லை என மக்கள் கூறியதை கேட்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. எத்தனை கோடி ஊழல் நடந்திருக்கிறது என எங்களுக்கே தெரியவில்லை. தோண்ட தோண்ட ஊழல் வருகிறது.
மக்கள் அமைத்துக் கொடுத்த அரசு மீது டிசைன் டிசைனாக குறை மட்டும் கூறுவார்கள்; தீய சக்தியும், தீர்ந்த சக்தியும் ‘பார்ட்டி பண்ட்’ என்ற பெயரில் அனைத்து துறைகளிலும் கொள்ளை; சட்டசபையில் பார்ட்டி பண்ட் என கூறியதும் எடுத்தார்கள் பாருங்கள் ஒரு ஓட்டம்; குற்றம் உள்ள நெஞ்சம் தான் குறுகுறுக்கும்.
நமக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவத்த, நமக்கு எதிரான சதிய, சூழ்ச்சியை இனி வரும் தலைமுறைக்கு தெரியப்படுத்த கரூரில் தவெக சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும். “ரீல் அல்ல ரியல் தாய்மாமன்”.. அறிஞர் அண்ணா பிறந்தநாளன்று தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம் அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.