July 11, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆலங்குளத்தில் நெல் கிட்டங்கி- அமைச்சர் வெங்கடரமணன் உறுதி

1 min read

Paddy warehouse in Alangulam – Minister Venkataramanan confirms.

11.7.2026
தென்காசி மாவட்டம்,
ஆலங்குளம் அருகே ஐந்தாங்கட்டளையில் பெரும் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட திறந்தவெளி நெல் குடோனில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் நேரில் ஆய்வு செய்தார்.

கடந்த 07.07.26 அன்று ஆலங்குளம் அருகேயுள்ள ஐந்தாங்கட்டளையில் அமைந்துள்ள பல லட்சம் நெல் மூட்டைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள திறந்தவெளி நெல் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் இருபதாயிரத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் எரிந்து நாசமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த தீ விபத்து குறித்து தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் நேரில் கள ஆய்வு செய்வதற்காக நேற்று வருகை தந்து
விபத்துக்கான காரணம் குறித்தும் சேதங்கள் குறித்தும் கள ஆய்வு செய்தார். அப்பொழுது பல இடங்களில் குவிந்து கிடக்கும் நெல்லுக்கு அடியிலிருந்து புகை வந்து கொண்டிருப்பதை கண்ட அமைச்சர் அந்த இடங்களை தோண்டச் சொல்லி ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் வெங்கடரமணன் விபத்து ஏற்பட்ட விதம் குறித்து காவல்துறை விசாரித்து வருவதாகவும் சேதங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருவதாகவும் கூறினார்.

இது போன்ற நெல் கொள்முதல் கிட்டங்கிகளில் பாதுகாப்பிற்காக தீயணைக்கும் கருவிகள், சிசிடிவி கேமராக்கள் வேலிகள் அல்லது காம்பவுண்ட் சுவர்கள் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக கூறினார்.

நெல் உலர் களம், நெல் கொள்முதல் விற்பனை நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல் மூட்டைகளின் பாதுகாப்பு குறித்த நமது நிருபரின் கேள்விக்கு உலர் களங்கள் இல்லாத இடங்களில் நெல் உலர் களங்கள் அமைக்கப்படும், நேரடி நெல் கொள்முதல் விற்பனை நிலையங்களில் நெல் மூட்டைகள் பாதுகாப்புக்காக ஷெட் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றார்.

தென்காசி, சுரண்டை போன்ற பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்பு வாகனங்களைக் கொண்டு தீயை அணைத்தும் இன்னும் நெருப்பு நெல்மணிகளுக்கு அடியில் கனன்று கொண்டிருக்கிறது. அருகிலுள்ள கடையம் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டிருந்தால் இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை குறைத்திருக்கலாம். எனவே கடையம் பகுதியில் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா என்ற நமது நிருபரின் கேள்விக்கு கடந்த ஆட்சியாளர்களிடம் மக்கள் தங்கள் தேவைகளை கேட்டுக் கொண்டே இருந்தனர். ஆனால் ஆட்சியாளர்கள் நிறைவேற்றவில்லை. தற்பொழுது அமைந்திருக்கக் கூடிய தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் தலைமையிலான அரசு மக்களின் தேவைகளை விரைந்து நிறைவேற்ற செயல்படுவோம் என அமைச்சர் கூறினார்.

பின்னர், ஆலங்குளத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கிக்கு சென்று அமைச்சர் வெங்கடரமணன் ஆய்வு செய்தார். அப்போது வங்கியில் வேலை செய்யும் மூட்டைத் தூக்கும் தொழிலாளிகள் தங்களுக்கு ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அமைச்சர் கூறினார்.

இந்த ஆய்வின்போது தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங், முதுநிலை மண்டல மேலாளர் வெங்கட லெட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர், காவல்துறை, மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தென்காசி மத்திய மாவட்ட செயலாளர் ராஜபிரகாஷ், தெற்கு மாவட்ட செயலாளர் விபின் சக்ரவர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *