July 11, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனோஜ் பாண்டியன் ஆய்வு

1 min read

Manoj Pandian inspects Kadayam Primary Health Centre.

11.7.2026
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஹெச். பால் மனோஜ் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.

கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஹெச். பால் மனோஜ் பாண்டியன் கடையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார்.

ஆரம்ப சுகாதார நிலையத்தின் வெளிநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் பிரிவு, எக்ஸ் ரே, ஸ்கேன், பல் மருத்துவம், சித்த மருத்துவம், மருந்தகங்கள், இரத்தம் மற்றும் நீர் பரிசோதனை ஆகிய பிரிவுகளில் ஆய்வுகள் செய்து அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் நவீனமயப்படுத்துவதற்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகள் குறித்தும் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சங்கரியிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்தை அதிக படுக்கை வசதிகளுடன் தரம் உயர்த்துவது குறித்தும் அதற்கு தேவையான இட வசதியை அரசிடமிருந்து பெறுவது குறித்தும் மழை நேரத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றிலும் சகதியாகாமல் இருப்பதற்காக பேவர் பிளாக் எனப்படும் வண்ண கற்களால் தரைத் தளம் அமைக்கவும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் உள்புற சாலையை சீரமைக்கவும் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சங்கரியிடம் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.

முன்னதாக, கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் காச நோயாளிகளுக்காக ஸோஹோ நிறுவனம் வழங்கும் ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பாக்கெட்டுகளையும் மருத்துவ பயனாளிகளுக்கு வழங்கினார்.

காசநோய் மருத்துவப் பயனாளிகளிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன் அவர்களில் ஒருவர் கல்லூரி மாணவி என்பதும் நோயின் தாக்கத்தால் கல்லூரி படிப்பை ஷிப்ட் பிரச்சினையால் நிறுத்த வேண்டிய சூழல் வந்ததாக கூறிய மாணவிக்கு முதல் ஷிப்ட்டில் கல்லூரி படிப்பை தொடர ஆவண செய்வதாக உறுதியளித்தார்.

கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களை விரைந்து கண்டறிந்து குணப்படுத்தும் பொருட்டு காச நோயாளிகளின் மாதிரிகள் கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே பரிசோதனை செய்வதற்கு வசதியாக நவீன மருத்துவ கருவியான ட்ரு நாட் சிபிஎன்எஎடி (True NAAT CBNAAT) எனும் மெஷின் ஏற்பாடு செய்து தரும்படி வட்டார மருத்துவ அலுவலர் சங்கரி மற்றும் முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் சாமுவேல் ஞானராஜ் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று ஆவண செய்வதாக சட்டமன்ற உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன் உறுதியளித்தார்.

இந்த ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் டி.கே. பாண்டியன் , கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் அலுவலர்கள் உடனிருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *