சிந்து நதிநீர் ஒப்பந்தம் மீண்டும் அமலுக்கு வர வாய்ப்பே இல்லை- பாகிஸ்தானுக்கு இந்தியா தகவல்
1 min read
No possibility of the Indus Waters Treaty coming back into force – India informs Pakistan
21.7.2026
ஜம்மு காஷ்மீரின் பஹ்லகாமில் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் உடன் சிந்து மற்றும் அதன் கிளை நதிகளின் நீரை பகிரும் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியது.
தற்போதுவரை இந்த ஒப்பந்தம் முடக்கத்திலேயே உள்ளது. மேலும் சிந்துவின் துணை நதியான செனாபில் அணை கட்ட இந்தியா முனைப்பு காட்டி வருகிறது. இந்தியாவில் இருந்து செல்லும் நீரை நம்பி பாகிஸ்தானின் விவசாயம் இருப்பதால் இந்த ஒப்பந்த முறிவை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து வருகிறது.
இதுதொடர்பாக இந்தியா மீது போர் தொடுக்கப்படும் போன்ற மிரட்டல்களையும் அந்நாட்டு அமைச்சர்கள் உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் உள்ளவர்கள் கூறி வருகின்றனர். மேலும் சர்வதேச அரங்கிலும் இந்த விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியுள்ளது.
சர்வதேச மேற்பார்வையில் 1960 இல் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இருந்து தன்னிச்சையாக விலகும் அதிகாரம் இந்தியாவுக்கு இல்லை என பாகிஸ்தான் வாதிடுகிறது.
இந்த சூழலில் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா திட்டவட்டமான பதில் ஒன்றை தெரிவித்துள்ளது.
அதாவது இந்த ஒப்பந்தம் அதன் தற்போதைய வடிவில் மீண்டும் அமலுக்கு வர வாய்ப்பே இல்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தான் எவ்வித நம்பிக்கையான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
ஐக்கிய நாடுகள் சபையால் தடைசெய்யப்பட்ட நபர்களும் அமைப்புகளும் இன்னமும் பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றனர்
பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே இந்த ஒப்பந்தத்தின் எதிர்காலம் அமையும்.
தற்போதைக்கு இந்த ஒப்பந்தத்தில் இருந்து முற்றிலுமாக வெளியேறும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை என்றாலும், நாட்டின் நலன்களுக்கு எதிராக இருக்கும் எந்தவொரு சர்வதேச ஒப்பந்தத்தையும் ரத்து செய்யும் உரிமை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக இந்தியாவுக்கு உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டதால் தான் பாகிஸ்தானில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
பாகிஸ்தானில் போதிய நீர் சேமிப்புத் திறன் இல்லாதது, நீர் கசிவுகள் மற்றும் அந்நாட்டின் மாநிலங்களுக்கு இடையேயான நீர் தகராறுகளே அங்குள்ள நீர் பற்றாக்குறைக்கு உண்மையான காரணங்கள் என தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் நீர்மின் திட்டங்களுக்குபாகிஸ்தான் தேவையில்லாமல் மீண்டும் மீண்டும் ஆட்சேபனை தெரிவித்து வளர்ச்சிப் பணிகளைத் தாமதப்படுத்துவதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.