July 21, 2026

Seithi Saral

Tamil News Channel

திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது பற்றி சபாநாயகர் விளக்கம்

1 min read

Speaker’s clarification regarding the arrest of DMK MLA Markandeyan.

21.7.2026

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது தொடர்பாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம் அளித்து கூறியதாவது:-

பேரவை தலைவரை கேட்டுவிட்டுதான் கைது செய்ய வேண்டும் என்கிற விதி இல்லை. 291-வது விதி என்ன சொல்கிறது என்றால்.. “பேரவைத் தலைவர் முன் அனுமதியின்றி எவரையும் பேரவை அமைப்பு எல்லைக்குள் கைது செய்யக்கூடாது. அதைபோன்று உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தின் கட்டளையையோ, அறிவிப்பையோ பேரவை தலைவர் முன் அனுமதியின்றி பேரவையின் அமைப்பு எல்லைக்குள் சேர்ப்பித்தல் கூடாது.

அமைப்பு எல்லை என்பது சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொதுமக்களும் தெரிய வேண்டும் என்பதை கடமையாக கருதுகிறேன். பேரவையின் அமைப்பு எல்லை என்பது சட்டமன்ற உறுப்பினர்களை பொறுத்தவரை பேரவை மண்டபம், அதன் புறக்கூடங்கள், அதனை சார்ந்த அலுவலகங்கள், அமைச்சர்களின் அறைகள், நூலகம், சிற்றுண்டி சாலை, தலைமை செயலகத்தில் உள்ள குழுக்கள் கூடும் அறை, அண்ணா சாலை அரசினர் தோட்டத்தில் உள்ள உறுப்பினர் குடியிருப்புக்குள் உள்ள குழுக்கள் கூடும் அறை, நூலகம் மற்றும் பேரவை தலைவரால் அவ்வப்போது குறிப்பிடப்படும் இடங்கள் உள்ளிட்ட அனைத்தும் பொருந்தும்.

வெளியே நடைபெறும் சம்பவங்களில் கைது செய்ய பேரவைத் தலைவரின் அனுமதி தேவையில்லை. திமுக எம்.எல்.ஏ.வை கைது செய்த உடன் அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எனக்கு தகவல் தெரிவித்தார். 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், நான் முறையாக மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்; அதன்படி அனைத்து உறுப்பினர்களுக்கும் மார்க்கண்டேயன் கைது குறித்து தகவல் தெரிவிக்கப்படும்.

பேரவை தலைவரை பொறுத்தவரைக்கும் என் கவனத்திற்கு இந்த பிரச்சினை கொண்டு வரப்படுமானால் என்ன நடவடிக்கை எடுக்கலாம்? எந்த காலக்கட்டத்தில் எடுக்கலாம்? என்பது பற்றி நான் முக்கியமாக முடிவு எடுப்பேன். என்னிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் அதை முறையாக சட்டவிதிகளுக்கு உட்பட்டு, சபை விதிகளுக்கு உட்பட்டு நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *