July 22, 2026

Seithi Saral

Tamil News Channel

எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

1 min read

Both Houses adjourned for the day due to the uproar by opposition parties.

22.7.2026
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி கூடியது. அவை கூடியதில் இருந்தே நீட் வினாத்தாள் கசிவு மற்றும் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டது குறித்து விவாதிக்கக் கோரி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்று காலை மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

12 மணிக்கு சபை கூடியதும் நீட் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கூறியதாவது:

விவாதம் எவ்வளவு நேரம் நடைபெறும், எந்த விதியின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த முடிவை அனைத்துக் கட்சி தலைவர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க அரசு முழுமையாக தயாராக உள்ளது. இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாம் அனைவரும் இணைந்து அர்த்தமுள்ள விவாதத்தை நடத்தவேண்டும் என்பதே அரசின் விருப்பம் ஆகும் என தெரிவித்தார்.

ஆனால் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

மேல்சபையிலும் நீட் விவகாரம் தொடர்பாக மாணவர்கள் மீதான தடியடியைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தப் பிரச்சனையை பேசினார். இதற்கு ஆளும் கட்சி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கார்கேவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குரல் கொடுத்தனர். இதனால் அவையில் கூச்சல்-அமளி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் ஏற்பட்ட அமளியால் மேல் சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *