அத்தியாவசிய பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு – முதலமைச்சர் விஜய் உத்தரவு
1 min read
Rs. 340 crore allocated for essential works – Chief Minister Vijay orders.
31.7.2026
தென்மேற்குப் பருவமழைப் பொழிவு, மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மற்றும் வேளாண் பயிர் சாகுபடி நிலை குறித்து ஆய்வுசெய்து குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழைப் பொழிவு, மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மற்றும் வேளாண் பயிர் சாகுபடி நிலை குறித்து விரிவான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இகூட்டத்தில் அணைகளில் நீர் இருப்பு / நீர்த்தேக்க அளவு, தமிழ்நாட்டில் தற்போதுவரை பெய்துள்ள தென்மேற்குப் பருவமழையின் அளவு, மழை அளவு குறைவாகப் பதிவாகியுள்ள மாவட்டங்களில் உள்ள நிலவரம், நகர மற்றும் கிராமப்பகுதிகளில் குடிநீர் விநியோகம், நடைபெற்றுவரும் வேளாண் பணிகள் மற்றும் குறுவை சாகுபடி நிலை, வேளாண் பயிர்களுக்கான குறுவைத் தொகுப்பு விநியோகம்,
கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்கள் கையிருப்பு, குடிநீர் விநியோகம் மற்றும் பிற அத்தியாவசிய திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகள் வாயிலாக நீர் ஆதாரங்களை மேம்படுத்திட மற்றும் லாரிகள் மூலமாகக் குடிநீர் விநியோகம் செய்திட 330 கோடி ரூபாயும், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் – மீனவர் நலத்துறைக்கு 10 கோடி ரூபாயும் ஆக மொத்தம் 340 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சாய்குமார், அமைச்சர்கள் வினோத், மரிய வில்சன் மற்றும் துறைவாரியான அதிகாரிகள் கலந்துகொண்டனர்.