இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி
1 min read
National-level letter writing competition organized by India Post
1.8.2026
இந்திய அஞ்சல் துறை சார்பில் 01.082026 முதல் 31.10.2026 வரை தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியினை அறிவித்துள்ளது.
இதன் தலைப்பு “அன்னை பூமிக்கு ஒரு கடிதம்: இயற்கையைப் பாதுகாக்க எனது உறுதிமொழி என்பதாகும்.
இந்த கடிதத்தினை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி,இவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் எழுதி “முதன்மை அஞ்சல் துறைத் தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை -600002
என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். உரையின் மேல் “அஞ்சல் துறை கடிதப்போட்டி” என்று தவறாமல் குறிப்பிடவேண்டும்.
இப்போட்டியில் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். போட்டி 18 வயதிற்குட்பட்டோர் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டோர் என இரு வயது பிரிவுகளிலும், உள்நாட்டு கடிதப் பிரிவு (Inland Letter Category) மற்றும் கடித உறைப் பிரிவு (Envelope Category) ஆகிய இரண்டு பிரிவுகளிலும் நடத்தப்படுகிறது. கடித உறைப் பிரிவில் பங்கேற்போர் A4 அளவிலான வெள்ளைத் தாளில் அதிகபட்சம் 1000 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். உள்நாட்டு கடிதப் பிரிவில் பங்கேற்போர் அதிகபட்சம் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். கையால் எழுதப்பட்ட கடிதங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அஞ்சலங்களில் விற்கப்படும் கடித உறை அல்லது வேறு உறைகளில் தேவையான அளவு அஞ்சல்தலை ஓட்டப்பட்ட கடித உறைகள் மற்றும் அஞ்சல் உறைகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
இந்த போட்டியில் பங்கேற்போர், தங்களது கடிதத்தின் மேல் “01.01.2026 அன்று என் வயது 18க்கு மேல் / 18க்கு கீழ் என்பதைச் சான்றளிக்கிறேன்” என்ற வாசகத்தை கட்டாயமாக எழுதி கையொப்பமிட வேண்டும்.
மாநில அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.25,000, இரண்டாம் பரிசு ரூ.10,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 வழங்கப்படும். தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.50,000, இரண்டாம் பரிசு ரூ.25,000, மூன்றாம் பரிசு ரூ.10,000 வழங்கப்படும்.
போட்டிக்கான கடிதங்கள் 31.10.2026 அன்று அல்லது அதற்கு முன் கிடைக்குமாறு அனுப்பப்பட வேண்டும். கடைசி தேதிக்குப் பிறகு பெறப்படும் கடிதங்கள் எந்தவிதத்திலும் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இப்போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்று சிறப்பான பரிசுகளை வெல்லுமாறு கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் செ. சுரேஷ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.