பிரதமரை விமர்சித்த 15 வயது சிறுமி வருத்தம் தெரிவித்தார்
1 min read
The 15-year-old girl who criticized the Prime Minister expressed regret.
1.8.2026
‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில், பெண் ஒருவர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்கு நாடு முழுதும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த பெண் மீது, உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதில், ‘பெண்ணின் கருத்துகள் பிரதமரின் பதவியின் கண்ணியத்தை அவமதிக்கிறது. சமூக நல்லிணக்கத்தை குலைத்து, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கக்கூடியதாக உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டது. அப்பெண்ணின் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு டெல்லி போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், பிரதமரை விமர்சித்து பேசியதற்கு மன்னிப்பு கோரி சிறுமி ஒருவர் நேற்று வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ‘எனக்கு 15 வயதுதான் ஆகிறது. போராட்டத்தில், என்னை சுற்றியிருந்தவர்களின் தூண்டுதலின் பேரில் பிரதமர் மோடியை விமர்சித்து பேசினேன். பல மோசமான விஷயங்களை பேசிவிட்டேன். இது, மன்னிக்க முடியாத செயல். பிரதமரை இழிவாக பேசியதற்காக ஒட்டுமொத்த தேசத்திடம் மன்னிப்பு கோருகிறேன். எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது. என்னையே என்னால் பார்க்க முடியவில்லை. அனைவரும் என்னை மன்னியுங்கள்’ என, குறிப்பிட்டுள்ளார்.