மதுரை கோட்ட ரயில்வேக்கு 4 மாதங்களில் ரூ.490.16 கோடி வருமானம்
1 min read
Madurai Railway Division earns Rs.490.16 crore in four months.
15.8.2026
தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் சுதந்திர தின விழா
கொண்டாடப்பட்டது. மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ரயில்வே காலனி செம்மண் திடலில் தேசிய கொடி ஏற்றி வைத்து ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், சாரண, சாரணியர், பள்ளி மாணவ, மாணவிகள் வழங்கிய அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார்.
விழாவில் அவர் பேசும்போது கூறியதாவது:-
கடந்த நான்கு மாதங்களில் ஒட்டுமொத்த மதுரை கோட்ட ரயில்வே வருமானம் ரூபாய் 490.16 கோடியாக அதிகரித்துள்ளது என்றார். இது கடந்த ஆண்டை காட்டிலும் 8.28 சதவீதம் அதிகமாகும்.
அதேபோல பயணச்சீட்டு வருமானம் கடந்த ஆண்டை காட்டிலும் 13.34 சதவீதம் அதிகரித்து ரூபாய் 328.57 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் சரக்கு போக்குவரத்து வருமானம் மற்றும் இதர வருமானங்கள் முறையே ரூபாய் 125.44 மற்றும் 11.64 கோடி ஈட்டப்பட்டுள்ளது. பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வோர் மீது அபராதம் விதிப்பது போன்ற இதர பயணிகள் வருமானம் 23 சதவீதம் அதிகரித்து 24.5 ரூபாய் கோடியாக உயர்ந்துள்ளது.
மதுரை கோட்டத்தில் 17 ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் ரூபாய் 292.52 கோடி செலவில் ஒரு சீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த திட்டத்தின் கீழ் காரைக்குடி, சோழவந்தான், மணப்பாறை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு மார்ச் மாதம் முதல் பயணிகள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. தற்போது பழனி, பரமக்குடி, அம்பாசமுத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் நிறைவு பெற்று புதிய நவீன வசதிகளுடன் பயணிகள் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது.
மதுரை ரயில் நிலையம் இரு நுழைவாயில்களுடன் மூன்று மாடி ரயில் நிலைய கட்டிடம், பெரியார் பேருந்து நிலையத்தை இணைக்கும் சுரங்கப்பாதை, ரயில் பாதை மேற்புற பகுதியில் 42 மீட்டர் அகல பயணிகள் தங்குமிடம், 37 மின் தூக்கிகள், 27 மின் ஏணிப்படிகள், நடை மேம்பாலங்கள், பல்லடுக்கு வாகன காப்பகங்கள், ஆகிய நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.