ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்-பரந்தூர் விமானநிலைய திட்டம் ரத்து
1 min read
Plan for 3 free cylinders annually and Parandur airport project cancelled
24.8.2026
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஆண்டிற்கு மூன்று இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும் பரந்துார் விமான நிலையம் திட்டம் கைவிடப்படும் எனறும் சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார்.
சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு வெளியிட்டு பேசியதாவது: நமது அரசால் பெண்கள் பயன்பெறும் வகையில், அவர்களின் முன்னேற்றத்துக்கும், பாதுகாப்புக்கும் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டம், அண்ணனின் சீர் திட்டம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நமது அரசு மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தினை முதன்மை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. பல்வேறு திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து, இந்த அரசு நிறைவேற்றும். கடந்த 4 மாதங்களாக வளைகுடா பகுதியில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக சமையல் காஸ் சிலிண்டர்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மாற்று எரிபொருளை பயன்படுத்தி வருவதாலும், அதிக விலை உயர்வு கொடுத்து வாங்குவதாலும் மக்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு நிதி நெருக்கடியான சூழலும், பொதுமக்களின் நிதி சுமையை குறைக்கும் வகையிலும், மக்களின் நலனை பாதுகாக்கவும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கிலும், குடும்ப தலைவிகள் பயன்பெறும் வகையில் முதல்ககட்டமாக அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஆண்டிற்கு 3 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும். இதற்கான தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
இத்திட்டத்தினால் 1 கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்து 104 குடும்பங்கள் பயன் அடைவார்கள். ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கு உட்பட்டு வருமானம் பெறும் குடும்பத்தினர், சிறு, குறு விவசாய குடும்பத்தினர், மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் போன்ற சமூகத்தில் உள்ள நலிந்த குடும்பத்தினர் பயன் அடைவார்கள்.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆயத்த பணிகள் துவங்கி உள்ளது. இத்திட்டம் வரும் ஜனவரி மாதம் பொங்கல்பண்டிகை முதல் செயலாக்கத்திற்கு கொண்டு வரப்படும். இத்திட்டத்திற்கு ஆண்டுதோறும் 4 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
- சென்னை பரந்துார் விமான நிலையம் திட்டம் கைவிடப்படும். புதிய இடம் விரைவில் முடிவு செய்யப்படும். மீனம்பாக்கம் விமான நிலையம் மேப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- வெற்றிப் பயணம் மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். முதற்கட்டமாக மாநகரம், நகரப் பகுதிகளில் இயங்கும் Express, LSS, டீலக்ஸ் (Deluxe) அரசுப் பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம்.
- மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப் பகுதிகளில், சாதாரணக் கட்டண பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். தேசத்தந்தை காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி முதல் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஆண்டுதோரும் 6000 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும். வருமான உச்சவரம்போ மற்றும் மேற்கொள்ளவிரும்பும் பயண எண்ணிக்கையிலோ கட்டுப்பாடுகள் இல்லை. இத்திட்டத்தின் கீழ் திருநரும் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம்.
இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.