பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தவில்லை- முதல்-அமைச்சர் விஜய் மனு
1 min read
Children were not involved in the campaign – Chief Minister Vijay’s petition
27.8.2026
தேர்தல் பிரசாரத்துக்கு குழந்தைகளைப் பயன்படுத்தியதற்காக தனது வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியாது எனக் கூறி, தனக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் மற்றும் வாக்காளர்கள் லட்சுமி நரசிம்மன், தினேஷ் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த 25-ம்தேதி விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும், அதற்கு இரண்டு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் தரப்பில் கேட்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த கோர்ட்டு இன்று (ஆகஸ்ட் 27-க்குள்) தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதல்-அமைச்சர் விஜய் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தவில்லை. குழந்தைகளை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாக கூறுவது தவறு. அவ்வாறு கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை என்று வைத்துக் கொண்டாலும், அந்த காரணத்துக்காக தனது தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க முடியாது.
தேர்தல் தொடர்புடைய நடவடிக்கைகளில் குழந்தைகளைப் பயன்படுத்த அரசியல் கட்சிகளுக்கு தடை விதித்து, கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டதா என்பதை தேர்தல் வழக்கு தாக்கல் செய்தவர்கள் நிரூபிக்கவில்லை. தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிப்பதற்கான காரணமாக கருத முடியாது.
மேலும், தேர்தல் செலவு கணக்கையும், வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற்றதையும் மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. யார் செலவு செய்தார்கள், எப்போது பணம் செலுத்தப்பட்டது என்பது போன்ற விவரங்கள் எதுவும் தேர்தல் வழக்குகளில் கூறப்படவில்லை. வழிபாட்டுத் தலங்களில் பிரசாரம் செய்ததாக கூறிய குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரங்கள் இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.