கடையம் பகுதியில் ஊருக்குள் வலம் வரும் கரடி
1 min read
A bear roaming through the village in the Kadayam area.
6.9.2026
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் கரடி நடமாடுவதை கண்டு பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
கடையத்தை சுற்றியுள்ள மக்கள் அதிகம் வசிக்கும் புலவனூர், நரையப்பபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கரடி நடமாட்டம் இருப்பது கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகள் மூலம் உறுதியாகியுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.
இப்பகுதிகளில் வாழும் மக்கள் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழில் செய்யும் மக்கள் என்பதால் தங்கள் வீடுகளில் ஆடு, மாடு மற்றும் கோழிகள் வளர்த்து வருகிறார்கள். கரடியால் இவைகளுக்கு ஆபத்து வரக்கூடுமென்ற அச்சத்தில் உள்ளனர். மேலும், தங்களது விவசாய நிலங்களுக்கு இரவு நேரங்களில் செல்ல வேண்டுயிருப்பதால் தங்களது உயிருக்கும் ஆபத்து ஏற்படுமென்ற அச்சமும் மக்களுக்கு அதிகமாகியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கருத்தப்பிள்ளையூர் அருகிலுள்ள வடமலைசமுத்திரம் கிராமத்தில் தோட்டத்தில் வேலைக்கு வந்த விவசாயியை கரடி கடித்து கொன்றது. இதை தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் கூண்டுகள் வைத்து கண்காணித்ததில் ஒரு கரடி பிடிபட்டது. தற்பொழுதும் அப்பகுதியில் கரடி நடமாட்டம் உள்ளதென மக்கள் பீதியில் உள்ளனர்.
இந்நிலையில் கடையத்தில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான புலவனூர் மற்றும் நரையப்பபுரம் பகுதிகளில் கரடியின் நடமாட்டம் பெரும் பீதியில் உள்ளனர்.
எனவே, வனத்துறையினர் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுத்து சுற்றித் திரியும் கரடியிடமிருந்து மக்களையும், ஆடு, மாடு போன்ற உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே, கீழக்கடையம், கல்யாணிபுரம் உள்ளிட்ட கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வரும் நிலையில் தற்போது ஊருக்குள் கரடியின் நடமாட்டமும் வனத் துறையினருக்கு கூடுதல் தலைவலியாக அமைந்துள்ளது.
இதுகுறித்து கடையம் வனச்சரகர் ஜெயபிரகாஷிடம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது வன ஊழியர்கள் மூலம் அதிக கவனத்துடன் கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து வருவதாக கூறினார்.