September 28, 2026

Seithi Saral

Tamil News Channel

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு;பிரிஜ் பூஷணுக்கு கோர்ட்டு நோட்டீஸ்

1 min read

Wrestlers’ sexual harassment case: Delhi court issues notice to Brij Bhushan.

28.9.2026
மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கில், பிரிஜ் பூஷணுக்கு டெல்லி கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக 12 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்தவரான மற்றும் பா.ஜ.க. முன்னாள் எம்.பி.யான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது, ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கங்களை வென்று தந்த வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா மற்றும் சாக்சி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.

கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி முதல் இதுதொடர்பாக அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். பின்னர், சிறிது கால இடைவேளைக்கு பின்னர் அதே ஆண்டின் ஏப்ரலிலும் போராட்டம் தீவிரமடைந்தது. அவர்களுக்கு ஆதரவாக சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் சங்கம் உள்பட அரியானா, பஞ்சாப், டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள விவசாய சங்க தலைவர்கள் பலர் அப்போது, நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்து, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அவர்களுக்கு தங்களது ஆதரவை வழங்கியதும் அப்போது பரபரப்பாக பார்க்கப்பட்டது.

பிரிஜ் பூஷணுக்கு எதிரான பாலியல் புகாரில் அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 354, 354டி, 345ஏ மற்றும் 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி காவல்துறை விசாரித்து, டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

அவரை இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பதவியில் இருந்து நீக்கி, கைது செய்யக்கோரி வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா உள்ளிட்ட நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். அவர் மீது 6 வீராங்கனைகள் புகார் அளித்தனர்.

இதுபற்றி டெல்லி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பான வழக்கு டெல்லி கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு நீதிபதி அஸ்வினி பன்வார், பிரிஜ் பூஷண் சரண் சிங்கையும், வழக்கில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் உதவி செயலாளர் வினோத் தோமரையும் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்து கடந்த ஆகஸ்டு 3-ந்தேதி தீர்ப்பு வழங்கினார்.

இதற்கு எதிராக விரைவில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும். நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. தொடர்ந்து போராடுவோம் என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கூறினார்.

இந்த நிலையில், பாலியல் வழக்கில் இருந்து பிரிஜ் பூஷண் சரண் சிங் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரிஜ் பூஷண் சிங் மற்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் உதவி செயலாளர் வினோத் தோமர் ஆகியோர் பதிலளிக்கும்படி டெல்லி கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நீதிபதி திக் வினய் சிங் இதற்கான தீர்ப்பை அளித்ததுடன், வழக்கு விசாரணையை அக்டோபர் 9-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *