September 30, 2026

Seithi Saral

Tamil News Channel

இலங்கையில் ராமர் பாலத்தை பார்வையிட ஆன்மிக சுற்றுலா

1 min read

Spiritual tour to view Ram Setu by boat launched in Sri Lanka.

28.9.2026
ராமர் பாலத்தை படகு மூலம் சென்று பார்வையிடும் வகையில் ஆன்மிக சுற்றுலாவை இலங்கை அரசு நேற்று (திங்கட்கிழமை) தொடங்கி இருக்கிறது.

ராமாயணத்தில் சீதையை சிறைபிடித்த ராவணன், இலங்கைக்கு தூக்கி சென்ற நிலையில், சீதையை மீட்க ராமன், தனது சகோதரர் லட்சுமணன் மற்றும் ஹனுமன் உள்பட வானர சேனைகளை கொண்டு தனுஷ்கோடி முதல் இலங்கை வரை கடலில் பாலம் அமைத்தார். பின்னர் அந்த பாலத்தில் சென்று ராவணனுடன் போரிட்டு சீதையை மீட்டு வந்தார்.

இந்த வரலாற்று புகழ்பெற்ற ராமர் பாலத்தை செயற்கைகோள் புகைப்படத்தில் தற்போதும் காணமுடிகிறது. தமிழகத்தின் தனுஷ்கோடி முதல் இலங்கை தலைமன்னார் வரை 18 மணல் திட்டுகளாக இருக்கும் ராமர் பாலத்தில், 6 திட்டுகள் இந்திய எல்லைக்குள் இருக்கின்றன. மீதமுள்ள 12 திட்டுகள் இலங்கை கடற்பரப்பில் வருகின்றன.
இந்த நிலையில், ராமர் பாலத்தை ஆன்மிக சுற்றுலா வளையத்திற்குள் கொண்டுவர இலங்கை அரசு திட்டமிட்டு இருந்தது. அதன் ஒரு பகுதியாக, கடந்த 25-ந் தேதி இலங்கை வடக்கு மாகாண கவர்னர் வேதநாயகம், மன்னார் கலெக்டர் கனவேஸ்வரன், வடக்கு மாகாண சுற்றுலாத் தலைவர் விவேகானந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் 4 படகுகளில் தலைமன்னாரில் இருந்து புறப்பட்டு ராமர் பாலத்தின் 3 மணல் திட்டுகள் வரை வந்து சோதனை ஓட்டம் நடத்தினார்கள்.

அப்போது, சுற்றுலா படகு சவாரியின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், ராமர் பாலத்தை படகு மூலம் சென்று தரிசிக்கும் ஆன்மிக சுற்றுலாவை இலங்கை அரசு நேற்று (திங்கட்கிழமை) தொடங்கியிருக்கிறது. இதன் மூலம் இந்திய ஆன்மிக சுற்றுலா பயணிகளையும் கவர முடியும் என்று இலங்கை அரசு நம்புகிறது. அன்னிய செலாவணியும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *