தென்காசி: சமூக வலைதளங்களில் பெண்களை குறிவைத்து பாலியல் தொந்தரவு-வாலிபர் கைது
1 min read
Tenkasi: Youth arrested for sexually harassing women on social media.
30.9.2026
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி, போலியான சமூக வலைதள கணக்கு மூலம் தொடர்ந்து குறுஞ்செய்திகள் மற்றும் வீடியோ அழைப்புகள் செய்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த நபரை தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப் பட்டது. விசாரணையில், ஒரே நபர் அந்த இரு பெண்களையும் குறிவைத்து, அவர்களது புகைப்படங்களை சமூக வலைதள கணக்கின் முகப்புப் படமாக தவறாக பயன்படுத்தி, தொடர்ந்து தொடர்பு கொண்டு வந்தது தெரியவந்தது.
மேலும், வீடியோ அழைப்புகள் மூலம் ஆபாசமாக நடந்து கொண்டதுடன், இரண்டு பெண்களையும் ஆபாசமாக நடந்து கொள்ளுமாறு வற்புறுத்தி தொடர்ந்து தொந்தரவு செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப விசாரணை மற்றும் சேகரிக்கப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்களின் அடிப்படையில், இச்சம்பவங்களில் தொடர்புடையவர் தென்காசி ஆசாத் நகர் பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் முத்துக்குமார் (வயது33) என்பது கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார் அறிவுறுத்தலின் படியும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் மேற்பார்வையிலும், காவல் ஆய்வாளர் வசந்தி தலைமையிலான தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் முத்துக்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பொதுமக்களுக்கு காவல்துறை தரப்பில் தொடர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகிறது குறிப்பாக சமூக வலை தளங்களில் தங்களது புகைப்படங்கள் அல்லது தனிப்பட்ட தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவது, ஆபாசமான குறுஞ்செய்திகள் அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் தொந்தரவு செய்வது போன்ற சம்பவங்கள் நடைபெற்றால் பொதுமக்கள் அச்சப்படாமல் உடனடியாக காவல்துறையை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்
மேலும், இதுபோன்ற சம்பவங்களில் கிடைக்கும் குறுஞ்செய்திகள், வீடியோ அழைப்பு விவரங்கள், ஸ்கிரீன்ஷாட்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்களை அழிக்காமல் பாதுகாத்து, விசாரணைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.