October 3, 2026

Seithi Saral

Tamil News Channel

இடைத்தேர்தல் நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது

1 min read

Campaigning for the by-election concludes tomorrow evening.

3/10/2026
தமிழகத்தில் கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு மதுராந்தகம் தொகுதியில் வெற்றிபெற்ற மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியில் வெற்றிபெற்ற சத்யபாமா ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் த.வெ.க.வில் இணைந்தனர்.

இதையடுத்து மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்த தொகுதிகளுக்கு வருகிற 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் 9-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி முடிவடைந்தது.

மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் மற்றும் சுயேட்சி வேட்பாளர்கள் என மொத்தம் 28 பேர் போட்டியிடுகிறார்கள்.

தாராபுரம் தொகுதியில் த.வெ.க. சார்பில் சத்யபாமா, தி.மு.க. சார்பில் சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் விஜய் கடந்த 25-ந்தேதியும், நேற்றும் மதுராந்தகம் தொகுதியில் பிரசாரம் செய்தார். கடந்த 30-ந்தேதி தாராபுரம் தொகுதியில் பிரசாரம் செய்த முதலமைச்சர் விஜய் மீண்டும் நாளை அங்கு பிரசாரத்துக்கு செல்கிறார்.

தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி உள்ளிட்டோரும், அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமியும், கம்யூனிஸ்டு வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு அக்கட்சிகளின் மாநில நிர்வாகிகளும் பிரசாரம் செய்தனர்.

மேலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 2 தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், 2 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இறுதிகட்ட பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். முதலமைச்சர் விஜய் நாளை (4-ந்தேதி) தாராபுரம் தொகுதியில் இறுதிகட்ட பிரசாரம் மேற்கொள்கிறார்.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நாளையுடன் பிரசாரம் ஓய்வதை தொடர்ந்து வருகிற 6-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதையடுத்து வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. வருகிற 5-ந்தேதி அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட உள்ளன. இதற்கான பணியில் தேர்தல் அலுவலர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

வருகிற 6-ந்தேதி மாலையில் ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்படுகின்றன. வருகிற 9-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இடைத்தேர்தலையொட்டி 2 தொகுதிகள் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *