தென்காசியில் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற கால்பந்து போட்டி
1 min read
Football match featuring college women students in Tenkasi
2.10.2026
தென்காசி அருகே ஆய்க்குடியில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற மகளிர் கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தென்காசி சப்-கலெக்டர் வைஷ்ணவி பால் பரிசு வழங்கினார்.
தென்காசி அருகேயுள்ள ஆய்க்குடி ஜெ.பீ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை சார்பில் கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் கால்பந்து போட்டி 2 நாட்கள் நடைபெற்றது.
இப்போட்டியில் 16 கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.
இதில் நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி அணி முதலிடமும், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி அணி 2வது இடமும், தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரி அணி 3வது இடமும், திருநெல்வேலி சாரதா மகளிர் கல்லூரி அணி 4வது இடமும் பெற்றன.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வி மைய இயக்குனரும், தலைவருமான முனைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். தென்காசி துணை ஆட்சியர் வைஷ்ணவி பால் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.
இந்நிகழ்ச்சியில், ஜெபீ கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் ஆரோக்கிய மேரி, நிர்வாகி ஜூடி லிசா, முதல்வர் சிவனேசன், விளையாட்டு ஆலோசகர் மனோகரன் சாமுவேல், உடற்கல்வி இயக்குநர்கள் சத்திய திருவளன், அகஸ்டின் ஞானராஜ், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளின் அமைப்பாளர் சிவஞானம், ஆண்கள் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் சையத் அலி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.